காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில் வசிக்கும் பொதுமக்கள் காவிரி கூட்டு குடிநீர் வழங்கக்கோரி நேற்று காலை தாராபுரம்-உடுமலை சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
சாலை மறியல்
தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஊராட்சி நிர்வாகம் வழங்கும் தண்ணீர் போதுமானதாக இருப்பதில்லை. அதனால் காவிரி கூட்டுக்குடிநீரும் வழங்க வேண்டும் என்று கேட்டு வந்தனர்.
இந்த நிலையில் காவிரி கூட்டுக்குடிநீர் வழங்கக்கோரி நேற்று காலை திடீரென 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் தாராபுரம்- உடுமலைப்பேட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இ்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானவேல் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் காவிரி கூட்டுக்குடிநீர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் வழங்கும் தண்ணீரை கூடுதலாக வினியோகிக்க வேண்டும் என கூறினர். அதனை கேட்ட போலீசார் உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கே.கே.ஜீவானந்தம் ஆகியோரிடம் செல்போனில் தகவல் தெரிவித்தனர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் போலீசாரிடம் கூறுயதாவது:-
கவுண்டச்சிபுதூர் ஊராட்சி சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் மிகப்பெரிய ஊராட்சியாக உள்ளது. இதில் வசிக்கும் மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் காவிரி கூட்டுக்குடிநீர் வரும் குழாயில் நஞ்சையம்பாளையம், தொப்பம்பட்டி , வட்டக் கவுண்டச்சிபுதூர் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு ஒரே குழாயில் வரும் தண்ணீரை பகிர்ந்து அளிப்பதால் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் ஏற்கனவே கூடுதலாக வழங்க கேட்டு மாவட்ட கலெக்டரிிடம் மனு கொடுத்துள்ளேன்.
அவர் அதற்கு அனுமதி வழங்கி நிதியும் வழங்குவதாக கூறியுள்ளார். நிதி வந்தவுடன் பணிகள் மேற்கொண்டு சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்
இதனை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.