விவசாயிகள் சாலை மறியல்
தாராபுரம் உழவர் சந்தை பகுதியில் சாலை ஓரத்தில் செயல்பட்டு வரும் காய்கறி கடைகளை அகற்றக்கோரி உழவர் சந்தை விவசாயிகள் நேற்று காலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உழவர் சந்தை
தாராபுரத்தில் உழவர் சந்தை தாராபுரம் அண்ணா நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கம் போல தினமும் விவசாயிகள் விளைவிக்கும் அனைத்து காய்கறிகளை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் உழவர் சந்தை அருகிலும், உழவர் சந்தை சுற்றிலும் சாலை நெடுக இருபுறம் ஓரப் பகுதியில் வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
சாலைமறியல்
மேலும் நடைபாதை வியாபாரிகள் வெளியூரிலிருந்து காய்கறிகளை கொண்டு வந்து உள்ளூர் காய்கறிகள் என்று கூறி காய்கறிகளை வியாபாரிகளும், இடைத்தரகர்களும் கடைகளை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி நேற்று காலை 5 மணிக்கு உழவர் சந்தைக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உழவர் சந்தை சுற்றிலும் அமைந்துள்ள அனுமதி பெறாமல் நடைபெற்று வரும் சாலை ஓர காய்கறி கடைகளை வீடுகளில் முன்புறம் அமைத்து செயல்படும் காய்கறி கடைகளையும் உடனே அகற்றக்கோரி தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் என்.சி.பி. நகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் முத்து விசுவநாதன் தலைமை தாங்கினார். மறியலால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நகராட்சி நிர்வாகத்திடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.