களை கட்டிய திருவோணம் ஆட்டுச்சந்தை


களை கட்டிய திருவோணம் ஆட்டுச்சந்தை
x
தினத்தந்தி 15 Jan 2023 1:00 AM IST (Updated: 15 Jan 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி திருவோணம் ஆட்டுச்சந்தை களை கட்டியது. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். பல லட்சம் ரூபாய்க்கு ஆடு விற்பனையானது.

தஞ்சாவூர்

பொங்கல் பண்டிகையையொட்டி திருவோணம் ஆட்டுச்சந்தை களை கட்டியது. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். பல லட்சம் ரூபாய்க்கு ஆடு விற்பனையானது.

ஆட்டுச்சந்தை

தஞ்சை மாவட்டம் திருவோணத்தில் நடைபெறும் மாடுகள், ஆடுகள் விற்பனை சந்தை மிகவும் பிரபலமானவை. மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் இருந்து இங்கே விற்பனைக்காக கொண்டு வரும் நாட்டு மாடுகள், ஆடுகள் தரமாகவும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவதால் நல்ல வரவேற்பு உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் இங்கு மாடுகளை வாங்கி செல்கின்றனர். அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து ஆடுகளையும் வாங்கி செல்கின்றனர். திருவோணம் மாட்டுசந்தை, ஆட்டுச்சந்தை வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெறும். இதில் பண்டிகை காலங்களில் சந்தையில் ஆடுகள் அதிகம் விற்பனையாகும்.

களை கட்டியது

தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி புதுக்கோட்டை, நெய்வேலி, இடையாத்தி உள்ளிட்ட பல்வேறு என பகுதிகளை சேர்ந்த இறைச்சி வியாபாரிகளும் இங்கு வந்து ஆடுகளை மொத்தமாக வாங்கி செல்வது உண்டு. இதேபோல் ஆடு வளர்ப்பவர்களும், ஆடு விற்பனையை தொழிலாக கொண்டவர்களும் ஆடுகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வருவார்கள். அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி திருவோணம் ஆட்டுச்சந்தை நேற்று களை கட்டியது.

திருவோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. அதேபோல் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்தும் இறைச்சி வியாபாரிகள், ஆடு வளர்ப்பவர்கள் ஏராளமானோர் ஆடுகளை வாங்குவதற்காக வந்து இருந்தனர். வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கினர்.

கூடுதல் ஆடுகள் விற்பனை

இந்த சந்தையில் நேற்று பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்றது. மற்ற நாட்களை விட பொங்கல் பண்டிகை வியாபாரம் என்பதால் கூடுதலாக 200 ஆடுகள் விற்பனையானது. விலைக்கு வாங்கப்பட்ட ஆடுகளை வியாபாரிகள் ஆட்டோக்கள், மினி லாரிகள், இருசக்கர வாகனங்களில் எடுத்து சென்றனர்.

அதேபோல் மாட்டு சந்தையிலும் மாடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மாடுகளை வாங்கி சென்றனர். நாட்டு மாடுகள் தான் அதிகஅளவில் விற்பனைக்கு வந்து இருந்தது. மாட்டு வண்டி இழுக்கும் ஜோடி மாடுகளையும் விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். பெரிய லாரிகள் மூலமாக வெளிமாவட்டங்களுக்கும் மாடுகள் கொண்டு செல்லப்பட்டன.

வியாபாரிகள் கருத்து

இது குறித்து வியாபாரிகள் சிலர் கூறும்போது, மாடு வளர்த்தால் அடுத்த வருடத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். ஆனா, ஆடு வளர்த்தால் அந்த வருடத்திலேயே பலன் கிடைக்கும். கிராம, நகரங்களில் ஆட்டு இறைச்சியின் தேவை அதிகரித்து வருகிறது.

ஆட்டின் இறைச்சிக்கு மக்கள் மத்தியில் தனி இடம் இருப்பதால் ஆடு வளர்ப்பினால் நல்ல லாபம் பார்க்க முடியும். விவசாயிகளின் அவசரத் தேவைக்குகூட ஒன்று, இரண்டு ஆடுகளை விற்று அந்த தேவையை பூர்த்தி செய்யலாம் என்றனர்.

25 ஆடுகள்

ஆட்டு இறைச்சி வியாபாரி சேட்டு முகமது கூறும்போது, நான் வாரம்தோறும் சந்தைக்கு வந்து இறைச்சிக்காக ஆடுகளை வாங்கி செல்வேன். இன்றைக்கு (நேற்று) 25 ஆடுகளை வாங்கி இருக்கிறேன். ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை ஆடுகளை வாங்கி இருக்கிறேன். ஒவ்வொரு ஆடும் 6 கிலோ முதல் 12 கிலோ வரை இருந்தது. மற்ற நாட்களை விட ஆடுகளின் விலை அதிகமாக தான் இருந்தது என்றார்.

இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மாட்டு சந்தை, ஆட்டுச்சந்தை நடக்கிறது.


Next Story