மார்க்கெட் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது


மார்க்கெட் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது
x

ஊட்டியில் பெய்த கனமழை காரணமாக மார்க்கெட் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் பெய்த கனமழை காரணமாக மார்க்கெட் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

கனமழை கொட்டியது

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கடந்த 2 நாட்களாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கனமழை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஊட்டியில் கடந்த 2 நாட்களாக வெயில் அடித்தது.

இந்தநிலையில் நேற்று வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பின்னர் மதியம் 12 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடாமல் தொடர்ந்து கனமழையாக கொட்டி தீர்த்தது. ஊட்டி மற்றும் முத்தொரை, பாலாடா, நஞ்சநாடு, இத்தலார் உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டது.

வெள்ளம் சூழ்ந்தது

ஊட்டி நகரில் பெய்த கனமழையால் கோடப்பமந்து கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ரெயில் நிலையம் அருகே படகு இல்ல சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால், குளம் போல் மாறியது. இதனால் வாகனங்கள், அரசு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்றன. மேலும் ரெயில்வே போலீஸ் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது.

இதேபோல் ஊட்டி-கூடலூர் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கபட்டனர். ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடைகள் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதி அடைந்தனர். கனமழை காரணமாக பள்ளி சென்று திரும்பிய மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்தனர். முன்னதாக கடும் பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்களை இயக்கினர்.


Next Story