பூந்தமல்லியில் தம்பதி மர்மசாவு; வீட்டில் பிணமாக கிடந்தனர் - கொலையா? போலீசார் விசாரணை
பூந்தமல்லியில் வீட்டில் தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி அடுத்த குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40). இவருக்கு புவனேஸ்வரி (35) மற்றும் பரிமளா (30) என 2 மனைவிகள். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
நேற்று காலை முதல் மனைவி புவனேஸ்வரி வேலைக்கு சென்று விட்டார். பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். வீட்டில் பாண்டியனும், 2-வது மனைவி பரிமளாவும் இருந்தனர்.
மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பிள்ளைகள், வீட்டின் அறையில் தங்கள் தந்தை பாண்டியன் தூக்கில் பிணமாக தொங்குவதையும், பரிமளா தரையில் படுத்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த பாண்டியன், சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். பின்னர் 2 மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வந்தார். கடந்த சில வாரங்களாக தனக்கு சரியான தூக்கம் வரவில்லை. எனவே தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தூக்கில் பிணமாக தொங்கிய பாண்டியனின் 2 கைகளும் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தது. தரையில் பிணமாக கிடந்த பரிமளாவின் கழுத்து இறுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அருகில் கயிறு ஏதும் இல்லை. 2-வது மனைவி பரிமளா மேல் மிகுந்த பாசம் கொண்ட பாண்டியன், பரிமளாவை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டதை கண்டு பரிமளா, தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்தாரா? அல்லது இருவரும் கொலை செய்யப்பட்டார்களா? என பல்வேறு கோணங்களில் பூந்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரது வீட்டில் இருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனினும் வீட்டின் கதவு பூட்டப்படாத நிலையில் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடப்பதால் அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கிறார்கள். 2 பேரின் செல்போன்களை கைப்பற்றிய போலீசார், இருவரும் கடைசியாக யாரிடம் எல்லாம் பேசினார்கள்? என விசாரித்து வருகின்றனர்.