மத்திய அரசு அதிகாரி என பொய் சொல்லி திருமணம்:மனைவியுடன் இருந்த படுக்கை அறை காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டிய கணவர் கைது4 பேருக்கு வலைவீச்சு
4 பேருக்கு வலைவீச்சு
மத்திய அரசு அதிகாரி என்று பொய் சொல்லி திருமணம் செய்துவிட்டு, மனைவியுடன் இருந்த படுக்கை அறை காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டிய கணவரை போலீசார் கைது செய்தார்கள். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
வரதட்சணை
கோபி அருகே உள்ள மொடச்சூர் ராஜன் நகரை சேர்ந்தவர் லிவ்விங்ஸ்டன் ஜெயபால் (வயது 30). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் பொம்மம்பட்டியை சேர்ந்த அபிதா (23) என்ற பெண்ணுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
லிவ்விங்ஸ்டன் ஜெயபால் தான் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என்று திருமணத்தின் போது கூறியுள்ளார். அதனால் வரதட்சணையாக ரூ.1 லட்சமும், 20 பவுன் நகையும் பெண் வீட்டார் கொடுத்துள்ளார்கள்.
படுக்கை அறை காட்சிகள்
இந்தநிலையில் லிவ்விங்ஸ்டன் மத்திய அரசு அதிகாரி இல்லை என்பது பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. இதுபற்றி அபிதா கணவரிடம் கேட்டுள்ளார். அப்போது லிவ்விங்ஸ்டன் ஜெயபால், நாம் 2 பேரும் ஒன்றாக இருந்த படுக்கை அறை காட்சிகளை வீடியோ கால் மூலம் பதிவு செய்து வைத்துள்ளேன். ஏற்கனவே அதை 2 பேர் பார்த்துள்ளார்கள். என்னிடம் வேறு ஏதாவது கேள்விகள் கேட்டால் அந்த காட்சிகளை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
கணவர் கைது
மேலும் லிவிங்ஸ்டனின் ஜெயபாலனின் தாயார் ஜெயா (52), தந்தை செல்லப்பாண்டி (55), அக்காள் கிறிஸ்டி ஞானசெல்வி (35), தங்கை கிரேட்டர் எஸ்தர் ஆகிய 4 பேரும் சேர்ந்து அபிதாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அபிதா புகார் அளித்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து லிவ்விங்ஸ்டன்ஜெயபாலை கைது செய்து, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஜெயா, செல்லப்பாண்டி, கிறிஸ்டி ஞானசெல்வி, கிரேட்டர் எஸ்தர் ஆகிய 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.