சிறுமியை திருமணம் செய்து பாலியல் கொடுமை:தொழிலாளி உள்பட 3 பேர் கைது
தேனி அருகே சிறுமியை திருமணம் செய்து பாலியல் கொடுமை செய்த தொழிலாளி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் ராஜபிரபு (வயது 37). கூலித்தொழிலாளி. இவர், கடந்த ஜனவரி மாதம் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்தார். சிறுமியின் பெற்றோரும், ராஜபிரபுவின் பெற்றோரும் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமணத்துக்கு பிறகு அவர் சிறுமியை பாலியல் கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன்பிறகு, ராஜபிரபு மற்றும் அவருடைய குடும்பத்தினர் சிறுமியின் வீட்டுக்கு சென்றனர். அவரை ராஜபிரபுவுடன் சேர்ந்து வாழாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜபிரபு, அவருடைய தாய் செல்வராணி (58), உறவினர் கவிதா (30), அதே ஊரைச் சேர்ந்த மணி மற்றும் சிறுமியின் தாய், தந்தை ஆகிய 6 பேர் மீது குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், ராஜபிரபு, செல்வராணி, கவிதா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.