மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஜி.எஸ்.டி.யை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரிசி, கோதுமை மாவு, தயிர் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. விதித்துள்ளதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் சோலையப்பன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் ஆலங்குடி தபால் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை தலைமை தாங்கினார். அறந்தாங்கி பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கவிவர்மன், கறம்பக்குடி தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் வீரமுத்து, காமராஜ் ஆகியோரும், கந்தர்வகோட்டை பொதுத்துறை வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல், பொன்னமராவதி தபால் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பக்ருதீன், ஆவுடையார்கோவில் தபால் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழுவை சேர்ந்த சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.