மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இளம்பிள்ளை:-
மகுடஞ்சாவடி ஒன்றியம் எர்ணாபுரம், கூடலூர் காளி கவுண்டம்பாளையம், கனககிரி, ஆகிய ஊராட்சி பகுதிகளில் வசிக்கக்கூடிய வீட்டுமனை இல்லாத பொதுமக்களுக்கு வீட்டுமனை வழங்க கோரி மகுடஞ்சாவடி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு கட்சியின் கிளை செயலாளர் பானுமதி தலைமை தாங்கினார். மாணிக்கம் செல்வமணி முன்னிலை வகித்தார்.
இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகராஜா கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் ஆறுமுகம், தாலுகா குழு உறுப்பினர் சீனிவாசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், வருவாய் ஆய்வாளரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.