மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஓமலூர்:-
ஓமலூர் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தாலுகா செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங், மாவட்ட செயலாளர் மேவை சண்முகராஜா, தாலுகா கமிட்டி உறுப்பினர் சின்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில் மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்த ஓமலூர் தாலுகா அலுவலக சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் காடையாம்பட்டி பகுதிக்கு தனி பத்திரப்பதிவு அலுவலகத்தை திறக்க வேண்டும், சிவில், ஜீவனாம்சம் குற்ற வழக்கு நடவடிக்கைக்காக ஒருங்கிணைந்த கீழமை கோர்ட்டு அமைக்க வேண்டும். காந்திநகர், காமலாபுரம், குண்டூர், தும்பிபாடி, ஆண்டிப்பட்டி, பொட்டியாபுரம் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், வீடு இல்லா மக்களுக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும். ஓமலூரில் அரசு அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு சர்க்கரை ஆலை போன்றவை திறக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
-----