கடலூரில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட மைய குழு கூட்டம் கடலூர் சூரப்பநாயக்கன்சாவடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சுப்புராயன், ராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செயற்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் மாவட்ட முழுவதும் குழந்தை திருமணங்களை தடுப்பதற்கான நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சிதம்பரத்தில் குழந்தை திருமணம் செய்து வைத்த 2 தீட்சிதர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தமிழக கவர்னர் அதனை விமர்சித்தும், கண்டித்தும் பேசி இருக்கிறார். அப்படியானால் குழந்தை திருமணத்தை கவர்னர் ஆதரிக்கிறாரா?
இந்த பிரச்சினையில் சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக கவர்னர் கூறியுள்ளார். தமிழக காவல்துறை அதிகாரி அதை மறுத்திருக்கிறார். சட்டப்படி தடுக்கப்பட்ட கன்னித்தன்மை பரிசோதனை நடந்தது உண்மையாக இருந்தால் அது கண்டிக்கத்தக்கது. அது குறித்து விசாரிக்க வேண்டும்.
என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இது ஊராட்சி மன்றத்தின் ஜனநாயகத்தையும், உரிமையையும் பறிப்பதாகும். ஆகவே அவர்களை மீண்டும் அதே இடத்தில் பணி அமர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.