மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
நெல்லை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 600 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 600 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் 6 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை
பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.துரைராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.முருகன், ஜோதி, செயலாளர்கள் நாராயணன், குழந்தைவேலு, முத்து சுப்பிரமணியன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு உறுப்பினர் கோபாலன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் மதுபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மறியலால் பாளையங்கோட்டை பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அங்கு தயார் நிலையில் நின்றிருந்த போலீசார், மறியலில்ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அவர்களை அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதில் மொத்தம் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
600 பேர் கைது
இதேபோல் களக்காட்டில் ஒன்றிய குழு செயலாளர் பூலுடையார், தலைமையில் நாங்குநேரி ஒன்றிய குழு செயலாளர் முருகன் முன்னிலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 46 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் வள்ளியூர், விக்கிரமசிங்கபுரம், முக்கூடல் மற்றும் வீரவநல்லூர் ஆகிய இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேர் கைது செய்யப்பட்டனர்.