மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x

வலங்கைமான் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர்

வலங்கைமான்:

வலங்கைமான் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒன்றிய ஆணையரிடம் மனு

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் சாரநத்தம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிய செயலாளர் ராதா தலைமையில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பொற்செல்வியிடம் புகார் மனு அளித்தனர்.

இந்த புகார் மனு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அதில் கூறியிருந்தனர். மேலும் கட்சியின் சார்பில் துண்டு பிரசுரங்களும் வினியோகித்தனர்.

போலீசில் புகார்

இந்த நிலையில் ஊராட்சி தலைவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அந்த சுவரொட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராதா குறித்து வாசகங்கள் இருந்தன.

நேற்று காலை அந்த சுவரொட்டிகளை பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள், இது குறித்து வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தனர்.

சாலைமறியல் போராட்டம்

பின்னர் மாலையில் வேடம்பூர்-நீடாமங்கலம் சாலையில் வெட்டாற்று பாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேடம்பூர் கிளைச் செயலாளர்கள் தியாகராஜன், அருள் ஆகியோர் தலைமையில் ஒன்றிய செயலாளர் ராதா மீது தவறான புகார்களை தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டியதை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story