மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 14 இடங்களில் மறியல்
விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 1,650 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரெயில் மறியல்
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதன்படி திண்டுக்கல்லில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நாகல்நகரில் இருந்து திண்டுக்கல் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் அரபுமுகமது, ஒன்றிய செயலாளர் சரத்குமார், கவுன்சிலர்கள் ஜோதிபாசு, கணேசன், மாரியம்மாள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
போலீஸ் குவிப்பு
இதற்கிடையே ரெயில் நிலையத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் வெள்ளைச்சாமி, சந்திரன், துணை சூப்பிரண்டுகள் கோகுலகிருஷ்ணன், ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், தூயமணி வெள்ளைச்சாமி உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
ரெயில் நிலையத்தை சுற்றிலும் தடுப்புகள் வைக்கப்பட்டன. ஆனால் போலீசாரின் தடுப்புகளை மீறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் நிலையத்துக்குள் புகுந்தனர். மேலும் ரெயில் தண்டவாளத்தில் ரெயில் என்ஜின் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஒரு சிலர் தண்டவாளத்தில் படுத்து கொண்டனர்.
வாக்குவாதம்-கைது
அப்போது மத்திய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மையை தடுக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் இறங்கினர்.
அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே 1-வது நடைமேடையில் மற்றொரு ரெயில் என்ஜின் வந்தது. அதையும் மறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் ஒருவழியாக மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 190 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
பழனியில் மறியல்
பழனியில், புதுதாராபுரம் சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு மறியல் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசாமி, நகர செயலாளர் கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் பகத்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதற்கிடையே பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 41 பெண்கள் உள்பட மொத்தம் 92 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்கள் பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
வேடசந்தூர், குஜிலியம்பாறை
வேடசந்தூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மார்க்கெட் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக குங்கும காளியம்மன் கோவில் தெருவுக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசாமி தலைமை தாங்கினார். வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 108 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் குஜிலியம்பாறையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினா் மறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். மறியலில் ஈடுபட்ட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.
நத்தம், நிலக்கோட்டை
நிலக்கோட்டையில் நடந்த மறியல் போராட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலாஜி, மாவட்ட குழு உறுப்பினர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் காசிமாயன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், சி.ஐ.டி.யூ. மூத்த உறுப்பினர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள், நிலக்கோட்டை நால்ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
நத்தம் பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் சின்னகருப்பன் தலைமையில் மறியல் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர்கள் பெருமாள், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 64 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடமதுரை, கோபால்பட்டி
இதேபோல் மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன் தலைமையில், வடமதுரையில் மறியல் நடந்தது. வடமதுரை ஒன்றிய செயலாளர் மலைச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட 144 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோபால்பட்டியில் நடந்த மறியலுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் வெள்ளைக்கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜா, பாப்பாத்தி உள்பட 132 பேர் கலந்து கொண்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.
14 இடங்களில் மறியல்
இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 14 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள், பெண்கள் உள்பட மொத்தம் 1,650 பேர் கைது செய்யப்பட்டனர்.