ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
கும்பகோணம்:
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
ஆதிகும்பேஸ்வரர்
கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற ஆதிகும்பேஸ்வரர் சாமி கோவில் உள்ளது. இங்கு மந்திர பீடேஸ்வரி என அழைக்கப்படும் மங்களாம்பிகை அம்பாள் உடனாகிய ஆதிகும்பேஸ்வர சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
உலகில் முதன் முதலில் தோன்றிய கோவில் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் உடைய ஆதி கும்பேஸ்வரர் சாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக பெருவிழா உலகம் முழுவதும் பிரசித்திப்பெற்றது. இதேபோல் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழாவும், மகாமக குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.
கொடியேற்றம்
அதன்படி இந்த ஆண்டு மாசி மக திருவிழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. வருகிற 28-ந் தேதி அறுபத்து மூவர் விழாவும், 1-ந் தேதி தன்னைத்தான் பூஜித்தல் மற்றும் ஓலை சப்பரம் வீதியுலாக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தேரோட்டம் வருகிற 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சி மகாமக குளத்தில் 6-ந் தேதி நடக்கிறது.
தொடர்ந்து 8-ந் தேதி விடையாற்றி உற்சவமும் 9-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் சுத்தாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகிறார்கள்.