மகளை கர்ப்பமாக்கிய கொத்தனார் கைது


மகளை கர்ப்பமாக்கிய கொத்தனார் கைது
x
தினத்தந்தி 19 Jun 2023 6:45 PM GMT (Updated: 19 Jun 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறை அருகே மகளை கர்ப்பமாக்கிய கொத்தனார் கைது செய்யப்பட்டார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே மகளை கர்ப்பமாக்கிய கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

2 மாத கர்ப்பிணி

மயிலாடுதுறை அருகே ஒரு ஊரைச்சேர்ந்தவர் 41 வயதான கொத்தனார். இவருடைய மகள் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெறாததால் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் அந்த இளம்பெண் 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகவல்லி மற்றும் மகளிர் போலீசார் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், பள்ளி கோடை விடுமுறையின் போது அந்த பெண்ணின் தம்பி, தங்கைகளை அழைத்துக் கொண்டு அவரது தாயார் திருவண்ணாமலையில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

தந்தை கைது

இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு மது போதையில் வீட்டிற்கு சென்ற தந்தை, மகள் என்றும் கூட பாராமல் தனது மகளிடம் தகாத முறையில் நடந்துள்ளார். மேலும் நடந்தவைகளை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

அதனைதொடர்ந்து பல முறை அவர் தனது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண் 2 மாத கர்ப்பிணியானது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் மகளை கர்ப்பமாக்கியதாக வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் தந்தையை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story