கொண்டலாம்பட்டியில்தனியார் அலுவலகத்தில் பணம் திருடிய கொத்தனார் கைதுஆதார் கார்டை தவறவிட்டு சென்றதால் போலீசில் சிக்கினார்
கொண்டலாம்பட்டியில் தனியார் அலுவலகத்தில் பணம் திருடிய கொத்தனார் கைது செய்யப்பட்டார். ஆதார் கார்டை தவறவிட்டு சென்றதால் போலீசில் சிக்கினார்.
கொண்டலாம்பட்டி,
பணம் திருட்டு
சேலம் அன்னதானப்பட்டி அகர மகால் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவர் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே தனியார் சரக்கு நிறுவனத்திற்கு மேலாளராக இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பொருட்களை அனுப்பிவிட்டு வசூலாகிய பணத்தை டிராவில் வைத்துவிட்டு அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று காலையில் அலுவலகத்துக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்த போது, டிராவில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நவநீத குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கு திருடர்கள் தடயத்தை விட்டு சென்றுள்ளார்களா? என தேடினர்.
ஆதார்கார்டால் சிக்கிய கொத்தனார்
அப்போது திருடிய நபர் தனது சட்டைப்பையில் வைத்திருந்த ஆதார் கார்டை தவற விட்டுச்சென்றுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த ஆதார் கார்டில் இருந்த முகவரியான ஓமலூர் புளியம்பட்டி பகுதிக்கு சென்று ஆனந்த் (வயது 33) என்பவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதில் ஆனந்த் கடந்த 6 மாதங்களாக அந்த திருட்டு நடந்த அலுவலகத்தின் பக்கத்து கட்டிடத்தில் கொத்தனாராக வேலை செய்து வந்ததும், சரக்கு நிறுவன அலுவலகத்தில் பணப்புழக்கம் இருப்பதை தெரிந்து கொண்ட அவர் நேற்று முன்தினம் இரவு திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.
திருடப்போன இடத்தில் ஆதார் கார்டை தவறவிட்டு சென்ற திருடனை போலீசார் உடனடியாக கைது செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.