மசினகுடியில் பரபரப்பு: காணாமல் போன வாலிபர் கழிவுநீர் கால்வாயில் பிணமாக மீட்பு-கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை
மசினகுடியில் காணாமல் போன வாலிபர் கழிவுநீர் கால்வாயில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்
மசினகுடியில் காணாமல் போன வாலிபர் கழிவுநீர் கால்வாயில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசில் புகார்
மசினகுடி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சந்திரன். அவரது மனைவி சிக்கி. இவர்களுக்கு மணி (வயது 33), சிவக்குமார் (28) என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி முதல் மணியை காண வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தாய் சிக்கி மசினகுடி போலீசில் புகார் செய்தார்.
அதில் தனது மூத்த மகன் மணிக்கு குடிப்பழக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரை காணவில்லை. இந்த சமயத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் காரில் வந்து எனது மகன் மணியை விசாரித்ததாக இளைய மகன் சிவக்குமார் என்னிடம் தெரிவித்தார். மேலும் எங்கள் வீட்டில் இருந்த கொட்டகையை சேதப்படுத்திவிட்டு சென்றதாக கூறினார். இதனால் காணாமல் போன எனது மகன் மணியை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
கால்வாயில் பிணமாக மீட்பு
இது தொடர்பாக மசினகுடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் மசினகுடி விநாயகர் கோவிலுக்கு செல்லும் சாலையோரம் கடும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் கழிவுநீர் கால்வாயை தோண்டி பார்த்தபோது காணாமல் போன வாலிபர் மணி இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணியை யாராவது அடித்துக் கொலை செய்து விட்டு உடலை சாக்கடையில் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் கூறும் போது, பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே முழு விவரம் தெரிய வரும் என தெரிவித்தனர்.
காணாமல் போன வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.