முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகள்:நீலகிரி மாவட்ட வருவாய் அதிகாரி சிலம்பம் சுற்றி அசத்தல்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் நீலகிரி மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்சினி சிலம்பம் சுற்றி அசத்தினார்.
ஊட்டி
முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் நீலகிரி மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்சினி சிலம்பம் சுற்றி அசத்தினார்.
5 பிரிவுகளில் போட்டி
தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6-ந் தேதி நடந்த போட்டிகளை கலெக்டர் அம்ரித் நேரில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இதில் 12 முதல் 19 வயது வரை பள்ளி மாணவர்கள், 15 முதல் 25 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்கள், 15 முதல் 35 வயது வரை உள்ள பொதுப் பிரிவினர், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது.
சிலம்பம் சுற்றி அசத்தல்
இதில் கால்பந்து, கிரிக்கெட், கபடி, வாலிபால், அத்லெட்டிக் போட்டிகள் நடக்கிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் முதல் 3 அணிகள் மற்றும் 3 வீரர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3000, இரண்டாம் பரிசாக தலா ரூ.2000, மூன்றாம் பரிசாக தலா ரூ.1000 வழங்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் ஊட்டி எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் சிலம்பாட்டம் போட்டிகள் நடைபெற்றது.
இதில் நீலகிரி மாவட்ட வருவாய் துறை அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது அவரே சிலம்பம் சுற்றி அசத்தினார். தொழில்முறை போட்டியாளர் போல் அவர் சிலம்பம் சுற்றியதை கண்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, சிலம்பாட்ட பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் சிலம்பம் சுற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.