பிரசவத்தில் தாய்-குழந்தை சாவு
பிரசவத்தில் தாய்-குழந்தை பரிதாபமாக இறந்தது.
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது வாலிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்தநிலையில் அந்த பெண் கர்ப்பம் ஆனார்.
நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்த்தனர். இந்தநிலையில் நேற்று காலை அந்த பெண்ணுக்கு இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு திடீெரன உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அந்த பெண் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே ஒரு மருத்துவரும், ஒரே ஒரு செவிலியர் மட்டுமே பணியாற்றுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பிரசவம் பார்க்க மருத்துவர் வருவதில்லை எனவும், இந்த ஆஸ்பத்திரியில் செவிலியர் மட்டுமே பிரசவம் பார்ப்பதாகவும் அந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
மருத்துவர் வராமல் செவிலியர் மட்டுமே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததால் தான் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் கூறினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண்ணின் உறவினர்கள் வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து வத்திராயிருப்பு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பெண்ணின் உடலை பெற்று சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.