பிரசவத்தில் தாய்-குழந்தை சாவு
பிரசவத்தின் போது தாய் மற்றும் குழந்தை என 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது வாலிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்தநிலையில் அந்த பெண் கர்ப்பம் ஆனார்.
நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்த்தனர். இந்தநிலையில் நேற்று காலை அந்த பெண்ணுக்கு இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது.
பெண் சாவு
குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அந்த பெண்ணை மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே ஒரு டாக்டரும், ஒரே ஒரு நர்சும் மட்டுமே பணியாற்றுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். பிரசவம் பார்க்க டாக்டர் வருவதில்லை எனவும், இந்த ஆஸ்பத்திரியில் நர்சு மட்டுமே பிரசவம் பார்ப்பதாகவும் அந்த பெண்ணின் உறவினர்கள் குற்ற சாட்டினர்.
முற்றுகை
டாக்டர் வராமல் நர்சு மட்டுமே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததால்தான் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் கூறினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண்ணின் உறவினர்கள் வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து வத்திராயிருப்பு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பெண்ணின் உடலை பெற்று சென்றனர்.