பிளஸ்-2 கணித தேர்வு கடினமாக இருந்தது; மாணவ-மாணவிகள் பேட்டி


பிளஸ்-2 கணித தேர்வு கடினமாக இருந்தது; மாணவ-மாணவிகள் பேட்டி
x
தினத்தந்தி 28 March 2023 2:15 AM IST (Updated: 28 March 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 கணித தேர்வு கடினமாக இருந்ததாக திண்டுக்கல்லில் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கூறினர்.

திண்டுக்கல்

பிளஸ்-2 கணித தேர்வு கடினமாக இருந்ததாக திண்டுக்கல்லில் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கூறினர்.

பிளஸ்-2 கணித தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இதில் நேற்றைய தினம் கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயாலஜி, நர்சிங் உள்பட 9 பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் கணிதம், விலங்கியல் பாடங்களுக்கான தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

சிவதர்ஷினி:- கணித பாட தேர்வு மிகவும் கடினமாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் வழக்கத்துக்கு மாறாக பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டு இருந்தன. ஆனால் நாங்கள் பாடப்புத்தகத்தில் இருக்கும் ஒரு மதிப்பெண் வினாக்களை முழுமையாக படித்து இருந்தோம். இதனால் ஓரிரு வினாக்களுக்கு எழுதிய விடைகள் சரியானதா? என்றே தெரியவில்லை.

அபிகிருஷ்ணா:- கணிதத்தில் ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டுமின்றி 3 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களும் கடினமாக இருந்தன. பாடப்புத்தகத்தில் இருக்கும் வினாக்களுக்கு பதிலாக புதிதாக வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. நன்றாக தயாராகி இருந்த போதும் அந்த வினாக்களுக்கு விடை எழுத கடினமாக இருந்தது.

கடினமாக இருந்தது

சஞ்சித்:- 2 மதிப்பெண் வினாக்களை தவிர அனைத்து வினாக்களும் மிகவும் கடினமாகவே இருந்தன. ஒவ்வொரு வினாவும் சிந்தித்து விடை எழுதும் வகையில் இருந்ததால் சிரமமாக இருந்தது. இதனால் கணித பாடத்தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறுவது சிரமம் தான்.

தருண்குமார்:- கணித பாடத்துக்கான பொதுத்தேர்வு தான் மிகவும் எளிதாக இருக்கும் என்று கூறுவார்கள். எனினும் தேர்வுக்கு நன்றாகவே தயாராக இருந்தேன். ஆனால் ஒரு மதிப்பெண் வினாக்கள் முதல் பெரிய வினாக்கள் வரை அனைத்தும் கடினமாக இருந்தன. இதனால் பெரும்பாலான மாணவர்களுக்கு மதிப்பெண் குறையும் வாய்ப்பு உள்ளது.

ஹரிதா:- ஒரு மதிப்பெண் வினாக்கள், 5 மதிப்பெண் வினாக்கள் பகுதியில் சில வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தன. இதனால் 100-க்கு 100 வாங்கி விடலாம் என்ற கனவு கலைந்து விட்டது. என்னை போன்று பல மாணவ-மாணவிகளுக்கும் இந்த நிலையே ஏற்பட்டு இருக்கிறது.

விலங்கியல் எளிது

ஜான்சிராணி:- விலங்கியல் பாடத்தில் அனைத்து வினாக்களும் மிகவும் எளிதாக இருந்தன. திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்டு இருந்த பல வினாக்கள் பொதுத்தேர்வுக்கும் வந்து இருந்தன. இதனால் விலங்கியல் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதி விட்டேன்.

கனகஜோதி:- விலங்கியல் தேர்வில் வினாக்கள் எப்படி கேட்கப்படுமோ? என்ற பயத்தில் வந்தேன். திருப்புதல் தேர்வு வினாக்கள், பாடப்புத்தகத்தில் இருக்கும் வினாக்கள் என அனைத்தையும் படித்து இருந்தேன். ஆனால் வினாத்தாளை வாங்கி பார்த்த போது படித்த வினாக்களாக இருந்ததால் மகிழ்ச்சியாக எழுதினேன். விலங்கியல் தேர்வை போன்று மீதமுள்ள தேர்வுகளும் இருந்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு மாணவ-மாணவிகள் கூறினர்.


Next Story