மதுரை குயின் மீரா பள்ளியின் முயற்சியில் 186 மாணவர்கள் இஸ்ரோவிற்கு அறிவியல் பயணம் -12-ந் தேதி புறப்படுகின்றனர்
மதுரை குயின் மீரா பள்ளியின் முயற்சியில் 186 மாணவர்கள் இஸ்ரோவிற்கு அறிவியல் பயணமாக 12-ந்தேதி புறப்படுகின்றனர்.
மதுரை குயின் மீரா பள்ளியின் முயற்சியில் 186 மாணவர்கள் இஸ்ரோவிற்கு அறிவியல் பயணமாக 12-ந்தேதி புறப்படுகின்றனர்.
இஸ்ரோ செல்ல ஏற்பாடு
மதுரை குயின்மீரா சர்வதேச பள்ளியில், பள்ளி தலைவர் டாக்டர் சந்திரன், நிர்வாக இயக்குனர் அபிநாத் சந்திரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை குயின் மீரா பள்ளி, டாக்டர் சி.ராமச்சந்திரன் தலைமையிலான செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் விண்வெளி தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வதற்காக இஸ்ரோவிற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தது. அதன்படி, "தி லிட்டில் எம்பரர்ஸ்" என்ற தலைப்பில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு, கலைத்திறன் மற்றும் கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி பள்ளிகள், தனியார், மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில், 25 தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 186 மாணவர்கள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு (இஸ்ரோ) வருகிற 12-ந்தேதி செல்கின்றனர். இதில் 30 மாணவர்கள் குயின் மீரா பள்ளியை சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்களில் பெரும்பாலான மாணவர்கள் மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள். அனைத்து ஏற்பாடுகளையும் குயின் மீரா பள்ளி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
12-ந்தேதி செல்கின்றனர்
இந்த மாணவர்களுடன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் செல்ல இருக்கின்றனர். வருகிற 12-ந்தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு, சென்னை செல்கின்றனர். அங்கு திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி ஏற்பாட்டின்பேரில், பல்வேறு முக்கிய பிரபலங்கள் இந்த மாணவர்களை சந்தித்து வாழ்த்த இருக்கின்றனர். அதன்பின்னர், 13-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவிற்கு சென்று ஒருநாள் முழுவதும் அங்கு இடங்களை பார்வையிட்டுவிட்டு, மறுநாள் மதுரை வருகிறார்கள். அவர்கள் சென்று வருவதற்கான வாகன வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள், இஸ்ரோ செல்வதற்கு பள்ளியின் ஆலோசனை குழு உறுப்பினர்களாக இருக்கும், இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி மைய துணை இயக்குனர் வெங்கட்ராமன், டாக்டர் அப்துல்கலாம் விஷன் 2020 அமைப்பின் தலைவர் திருச்செந்தூரான் ஆகியோரின் முயற்சிகளும் முக்கியமானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின்போது, கல்வி இயக்குனர் சுஜாதா குப்தன், துணை இயக்குனர் (நிர்வாகம்) ஜோஸ்பின் அன்னி ஷீபாஅருள் தாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.