சாட்சிகளை கலைக்கக்கூடும்: குருத்திகா பெற்றோர், உறவினர்கள் முன்ஜாமீன் மனு தள்ளுபடி -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சாட்சிகளை கலைப்பார்கள் என்பதால் குருத்திகாவின் பெற்றோர், உறவினர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சாட்சிகளை கலைப்பார்கள் என்பதால் குருத்திகாவின் பெற்றோர், உறவினர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கடத்தல் வழக்கு
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் வினீத் மாரியப்பன். என்ஜினீயர். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த குருத்திகா படேல் என்பவரும் காதலித்தனர். அவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் திருமணம் செய்தனர். இதுகுறித்து குருத்திகாவின் பெற்றோர் குற்றாலம் போலீசில் புகார் செய்தனர்.
அந்த புகார் மீதான விசாரணைக்கு வினீத், குருத்திகா ஆகியோர் சென்று விட்டு வீடு திரும்பிய போது அவர்களை மறித்த ஒரு கும்பல், வினீத்தை தாக்கி விட்டு குருத்திகாவை கடத்திச் சென்றனர். இது தொடர்பாக 12 ேபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்களில் குருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்தான் பெரும்பாலானவர்கள். அவர்களின் சிலர் கைதானார்கள். மற்றவர்கள் தலைமறைவானார்கள். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள பெற்றோர் உள்ளிட்ட சிலர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
குருத்திகா ஆஜராகவில்லை
இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இது தொடர்பாக குருத்திகாவிடம் விசாரிக்க வேண்டும் என்பதால் அவரை இந்த கோர்ட்டில் ஆஜர்படுத்துங்கள் என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் குருத்திகாவை ஆஜர்படுத்தவில்லை.
பின்னர் நீதிபதி, குருத்திகாவின் தந்தை, தாய் மற்றும் குருத்திகாவின் 2-வது கணவர் ஆகியோர் தற்போது எங்கு உள்ளனர் என கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் அனைவரும் தமிழகத்தில்தான் உள்ளனர் என்று வக்கீல் தெரிவித்தார்.
இதனையடுத்து தந்தை, தாய் மற்றும் 2-ம் கணவர் இங்கு இருக்கும்போது குருத்திகாவை ஏன் கோர்ட்டுக்கு அழைத்து வரவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மனுக்கள் தள்ளுபடி
இதையடுத்து மனுதாரர்கள் தரப்பில் குருத்திகாவை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்துகிறோம் என்று கேட்டனர். ஆனால் அதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கை பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று நீதிபதி உத்தரவிட்டார்.