தொழிலாளியின் உடலை புதைக்க மயான ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு
பழனி அருகே தொழிலாளியின் உடலை புதைக்க மயான ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் உறவினர்கள் பிணத்துடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயான ஆக்கிரமிப்பு
பழனி அடுத்த கோரிக்கடவு கிராமத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பொது மயானம் உள்ளது. இந்த மயானத்தின் ஒரு பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வருவாய் துறையினர் கடந்த மாதம் மயானத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் கோரிக்கடவு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கிருஷ்ணன் என்பவர் இறந்தார். அவருடைய உடலை மயானத்தில் புதைக்க உறவினர்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது மயானத்தை ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்து இருந்த சிலர் அங்கு வந்து உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணனின் உறவினர்கள் உடலை எடுத்து வந்து பழனி-தாராபுரம் சாலையில் வைத்து திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு, கிருஷ்ணனின் உடலை மயானத்தில் புதைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.