மயிலாடுதுறை நகர்மன்ற கூட்டம்
மயிலாடுதுறை நகர்மன்ற கூட்டம் நடந்தது
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-
ஜெயந்தி (அ.தி.மு.க.): திருவிழந்தூர் தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் அருகே பழுதடைந்த காவிரி பாலம் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டு, அது ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன்கருதி அந்த பகுதியில் பாலம் கட்ட வேண்டும்.
கணேசன் (ம.தி.மு.க.): திருவிழந்தூர் பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
கல்யாணி ரகு(தி.மு.க.): திருவிழந்தூர் பகுதியில் அரை மணி நேரம் மட்டுமே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது.
தலைவர்: ஒரு மணி நேரம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டுவரி ரசீது
ரமேஷ் (தி.மு.க.): பூம்புகார் சாலையில் மழைநீர் தேங்காதவாறு வடிகால்களை உடனே சீரமைக்க வேண்டும்.
சம்பத் (தி.மு.க.): கிட்டப்பா பாலம் சுடுகாட்டில் மின்கம்பம் ஒன்று சாய்ந்துள்ளது. அதனை உடனே சீரமைக்க வேண்டும்.
ரத்தினவேல்(தி.மு.க.): கோவில் நிலங்களில் வசிப்போருக்கு வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும்.
ஆணையர்: கோவில் நிலங்களில் வசிப்போருக்கு கோவில் சார்பில் தடையில்லா சான்று வழங்கினால்தான் வீட்டு வரி ரசீது வழங்க முடியும்.
தலைவர்: இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறையினருடன் தனியாக கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும்.
சாலையை சீரமைக்க வேண்டும்
கீதா (தி.மு.க.): தருமபுரம் சாலை, ஆலமரத்தடி பனந்தோப்பு சாலையை சீரமைக்க வேண்டும்.
தனலட்சுமி (அ.தி.மு.க.): ஆர்.பி.என். நகர் சாலையில் புதிய பாலம் கட்ட வேண்டும்.
வளர்மதி (தி.மு.க.):கலைஞர் நகரில் சாலையை சீரமைக்க வேண்டும்.
உஷாராணி (தி.மு.க.) : நகராட்சி மீன் மார்க்கெட்டில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆகவே, பாதாள சாக்கடை இணைப்பு வழங்கி மீன்மார்க்கெட் பகுதியை சுகாதாரமாக மாற்ற வேண்டும்.
ராமச்சந்திரன் (அ.தி.மு.க.): காமராஜர் சாலையில் புனுகீஸ்வரர் கீழவீதி சந்திப்பில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.
ரஜினி(தி.மு.க.): ெரயில்வே மேம்பாலத்தில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
குப்பை
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள் நகரில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த ஆணையர், குப்பைகளை மேலாண்மை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முடிவில் நகரசபை துணைத்தலைவர் சிவகுமார் நன்றி கூறினார்.