மயிலாடுதுறை- விழுப்புரம் ரெயில் சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்
கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட மயிலாடுதுறை- விழுப்புரம் ரெயில் சேவை 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை ரெயில்வே ஜங்சனில் இருந்து விழுப்புரம், திருநெல்வேலி, திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு பாசஞ்சர் ரெயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிபடியாக தளர்த்தப்பட்டு பல ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. ஆனாலும் மயிலாடுதுறை ரெயில்வே ஜங்ஷனிலிருந்து புறப்பட்ட விழுப்புரம், திருவாரூர், திருநெல்வேலி ஆகிய பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று ரெயில்வே பயணிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு விதமான போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன. அதனையடுத்து மயிலாடுதுறையில் இருந்து கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட விழுப்புரம் பாசஞ்சர் ரெயில், சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு தன் சேவையை மீண்டும் தொடங்கியது.
அந்த ரெயில் மயிலாடுதுறை ஜங்சனிலிருந்து இன்று காலை 6 மணிக்கு புறப்பட்டது. காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் காலை 9.05 -க்கு விழுப்புரம் சென்றடைகிறது. இதற்கு கட்டணமாக ரூ. 60 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் என்பதால் பயணிகள் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது. இதுபோல் 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட மயிலாடுதுறை- திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில் இன்று காலை 11.35 மணிக்கு திண்டுக்கல் சிறப்பு விரைவு ரெயில் ஆக இயக்கப்படுகிறது.