மயிலாடும்பாறை-மல்லப்புரம் மலைப்பாதை சீரமைக்கப்படுமா?


மயிலாடும்பாறை-மல்லப்புரம் மலைப்பாதை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 18 Jan 2023 12:30 AM IST (Updated: 18 Jan 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடும்பாறை- மல்லப்புரம் மலைப்பாதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி

சாலை என்பது மக்களுக்கான அடிப்படை தேவைகளில் ஒன்றாகும். சாலை குறுகலாக இருந்தால் வாகன பெருக்கத்தால் நெரிசல் ஏற்பட்டு பயண நேரம் குறையும். ஆகவே பயண நேரத்தை குறைப்பதற்காக எத்தனையோ குறுகிய சாலைகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன.

மயிலாடும்பாறை-மல்லப்புரம்

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளும் வாகன பெருக்கம் காரணமாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. நகர்ப்புற பகுதிகளில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் இருந்து மதுரை மாவட்டம் மல்லப்புரம் வழியாக உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளுக்கு செல்வதற்கு சாலை அமைத்தால் பயண தூரமும், பயண நேரமும் குறையும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இதனால், மயிலாடும்பாறை-மல்லப்புரம் இடையே சாலை அமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சாலை, பஸ் சேவை

இதைக்கருத்தில் கொண்டு கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடும்பாறையில் இருந்து மல்லப்புரம் வரை சுமார் 20 கிலோமீட்டருக்கு சாலை அமைக்கப்பட்டது. அதில் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை ஆகும். அதற்கு ஏற்ப கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடும்பாறை அருகே தாழையூத்து-மல்லப்புரம் இடையே அரசு மினிபஸ் சேவை தொடங்கப்பட்டது.

இந்த சாலை அமைக்கப்பட்டதால், மக்கள் தங்களின் நீண்டகால கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு கிடைத்ததாக நம்பினர். ஆனால், அந்த நம்பிக்கைக்கு ஆயுள் குறைவு. சில ஆண்டுகளில் அந்த நம்பிக்கை பொய்த்து போனது.

சாலை குறுகிய அளவில் இருந்த நிலையில் அதில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் நாளடைவில் சாலை சேதம் அடைந்தது. சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டியது. சாலையின் அகலம் மேலும் குறுகியது.

குண்டும், குழியுமாக...

சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட போது, கனரக வாகனங்கள், சரக்கு வேன்கள், கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் போன்றவை இந்த சாலையில் இயக்கப்பட்டன.

உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் வாகனங்களும் இந்த சாலையில் இயக்கப்பட்டன. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கும் இந்த சாலை உறுதுணையாக இருந்தது.

ஆனால், சாலை சேதம் அடைந்து அகலம் குறுகியதால் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. நாளடைவில் மினிபஸ், பள்ளி வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் செல்லும் போது, ஒன்றுக்கு ஒன்று விலகி செல்ல சிரமம் ஏற்படுகிறது. சில நேரங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று உரசி விபத்துகள் ஏற்படுகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமே இந்த சாலையை தற்போது அதிக அளவில் பயன்படுத்தும் நிலை உள்ளது.

பயண தூரம் குறையும்

சாலையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை வரை மலைப்பாதை சீரமைக்கப்பட்டது.

ஆனால், மதுரை மாவட்ட கட்டுப்பாட்டில் உள்ள சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த மலைப்பாதையில் இரு வாகனங்கள் செல்லும் வகையில் அகலப்படுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த சாலையில் பயணிப்பதன் மூலம் பயண தூரம் வெகுவாக குறையும்.

மயிலாடும்பாறையில் இருந்து ஆண்டிப்பட்டி வழியாக உசிலம்பட்டி செல்ல வேண்டும் என்றால் 58 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். ஆனால், இந்த சாலையில் 45 கிலோமீட்டர் தூரம் தான். இதனால், 13 கிலோமீட்டர் தூரம் மிச்சமாகும்.

சரக்கு போக்குவரத்து

இதேபோல் பேரையூர் செல்வதற்கு ஆண்டிப்பட்டி வழியாக சுமார் 85 கிலோமீட்டர் தொலைவு. ஆனால், மல்லப்புரம் வழியாக சென்றால் 43 கிலோமீட்டர் தூரம் மட்டுமே. இதன் மூலம் 42 கிலோமீட்டர் பயண தூரம் குறைவதோடு, பயண நேரமும் சேமிக்கப்படுகிறது.

பேரையூர் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கும் இந்த சாலை பெரும் பயனளிப்பதாக இருக்கும். கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை சுற்றுப்பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் விளையும் விளைபொருட்களை உசிலம்பட்டி, பேரையூர், விருதுநகர் பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்கும் விவசாயிகளுக்கு ஏதுவாக இருக்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு சரக்கு போக்குவரத்து செலவு குறையும். இதுதொடர்பாக மக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

விவசாயிகள் தவிப்பு

முத்துமாணிக்கம் (டிரைவர், கல்லுப்பட்டி) :- மதுரை மாவட்டம் எழுமலை, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி வழியாக வந்து செல்வதை விடவும், மல்லப்புரம் வழியாக வந்து செல்லும் போது பயண தூரம் குறைகிறது. தற்போது இந்த சாலை சேதம் அடைந்துள்ளதால் கார்களில் செல்வது சிரமமாக உள்ளது. சாலையும் அபாயகரமாக உள்ளது. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கருத்தில் கொண்டு சிரமமாக இருந்தாலும், இந்த மலைப்பாதையில் சென்று வருகிறேன். இந்த சாலை சீரமைக்கப்பட்டால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முருகன் (விவசாயி, முத்தாலம்பாறை) :- மல்லப்புரம் மலைப்பாதையில் புதிய தார்ச்சாலை அமைத்து அதில் பஸ் வசதி ஏற்படுத்திய பின்பு முத்தாலம்பாறை, தாழையூத்து உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மல்லப்புரம் பகுதியில் நிலங்களை வாங்கி விவசாயத்தில் ஈடுபட தொடங்கினர். இதேபோல் மல்லப்புரம் பகுதி பொதுமக்கள் தாழையூத்து பகுதியில் விவசாய நிலங்கள் வாங்கினர். சாலை நல்ல நிலையில் இருந்து அதில் அதிக போக்குவரத்து நடைபெற்று வந்த சமயம் விவசாயிகள் தோட்டங்களுக்கு சென்று வரவும், விளை பொருட்களை ஏற்றி வரவும் எளிதாக இருந்தது. ஆனால் தற்போது சாலை சேதமடைந்துள்ளதால் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. விவசாய தோட்டங்களுக்கு செல்வதற்கு பயணிகள் ஆட்டோவுக்காக காத்திருந்து செல்ல வேண்டியது உள்ளது. மோசமான சாலையை காரணம் காட்டி, ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அதிக செலவு செய்து விளை பொருட்களை எடுத்துச் செல்லும் நிலை உள்ளது.

சீரமைக்க வேண்டும்

வள்ளியம்மாள் (குடும்பத்தலைவி, தாழையூத்து):- தாழையூத்து-மல்லப்புரம் இடையே அரசு மினிபஸ் இயக்கப்பட்டபோது, மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளில் உள்ள உறவினர்களின் வீட்டு விசேஷங்களுக்கு செல்வதற்கும் எளிதாக இருந்தது. தற்போது பஸ் போக்குவரத்து இல்லாததால், உறவினர் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் ஆண்டிப்பட்டி வழியாக செல்ல வேண்டும். இதனால், பயணம் செய்வதே சிரமம் நிறைந்ததாக மாறியுள்ளது. மக்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைத்து, மீண்டும் பஸ்கள் இயக்க வேண்டும்.

பாண்டியம்மாள் (குடும்பத்தலைவி, தாழையூத்து) :- இந்த சாலையில் பஸ் இயக்கப்பட்டபோது, கடமலை-மயிலை ஒன்றிய பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர்கல்விக்காக உசிலம்பட்டி பகுதிக்கு சென்று வர பயனுள்ளதாக இருந்தது. சாலை மோசமாகி பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், உயர்கல்விக்கு அன்றாடம் சென்று வர முடியவில்லை. குழந்தைகளை விடுதிகளில் சேர்த்து படிக்க வைப்பதால் படிப்பு செலவும் அதிகரிக்கிறது. இந்த சாலை விவசாயிகள், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் அவசிய தேவையாக இருக்கிறது. தமிழக அரசு இந்த சாலையை சீரமைத்து பஸ் போக்குவரத்து தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story