சிற்பகலைக்கு கட்டியம் கூறும் மயில்ரங்கம் கோவில்


சிற்பகலைக்கு கட்டியம் கூறும் மயில்ரங்கம் கோவில்
x

சிற்பகலைக்கு கட்டியம் கூறும் மயில்ரங்கம் கோவில்

திருப்பூர்

தமிழ்குடியின் தொன்மையும், பழமையும் கதையல்ல. தமிழர்களின் வாழ்வியலோடு, உதிரத்தோடு பின்னி பிணைந்தவை. ஆயக்கலைகள் 64 -யும் ஐயுற கற்றவர்கள் தமிழர்கள். அந்த காலத்திலேயே கடலில் கலம் செலுத்தி வீரத்தின் விளைநிலம் தமிழ்நாடு என்று பறையடித்து, நெஞ்சை நிமிர்த்தி வெற்றி கொடி நாட்டியவர்கள் தமிழர்கள். ஒவ்வொரு மன்னனின் கீர்த்தியும், கல்வெட்டுகளில் காலம் இருக்கும் வரை மண் மணம் பரப்பும். அந்த வகையில் அவர்கள் கற்றகலைகளில் வடித்த சிற்பங்கள் காலம் கடந்தும் கண் முன் உயிரோடு உலவுகிறதே. ஒவ்ெவாரு கோவிலும் செதுக்கப்பட்ட சிற்பம் காணகண்கோடி வேண்டும். சிற்பங்கள் அனைத்தும் விழி திறந்து வழிகாட்டுவது ேபால் அல்லவா உள்ளது. ஒவ்வொரு கோவிலிலும் வெவ்வேறு சிற்பியின் கைவண்ணத்தில் அல்லவா காலம் கடந்தும் ஜொலிக்கிறது. வெள்ளக்கோவில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம்தான் மயில்ரங்கம். இங்கு வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும் அமராவதி ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கும் கோவில்தான் தையல்நாயகி அம்மன் உடனமர் வைத்திய நாத சுவாமி கோவிலாகும். காவேரிக் கரையில் தேவாரப் பாடல் பெற்ற தலமாக விளங்கும் புகழ்பெற்ற கோவில்தான் வைத்திஸ்வரன் கோவில். இங்குச் சிவபெருமான் வைத்தியநாகராக வீற்றிருந்து மக்களின் பிணிகளை அகற்றி வருகிறார். பழங்காலத்தில் மக்கள் நெடுந்தொலைவு பயணம் செய்து தங்கள் உடல் பிணியைப் போக்குவது கடினமாக இருந்ததால் கொங்கு மண்டல மக்களின் நலன் கருதி இங்கு அதே வைத்தியநாதர் பெயரில் கட்டப்பெற்ற கோவில்தான் மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவிலாகும்.

கல்வெட்டுக்களில் இந்த கோவில் இறைவன் தீராவினை தீர்க்கும் தம்பிரானார் என்று அழைக்கப்படுகிறார். கொங்கு மண்டலத் கோவில்கள் வரலாற்றில் 84 தூண்களுடன் மிகப் பிரம்மாண்டமான கட்டிடக்கலைகளுடன் விளங்கும் கோவில் இதுவாகும். இங்குள்ள வசந்த மண்டபத்தில் நான்கு இசைத்தூண்கள் உள்ளன. ஒவ்வொரு அங்குலமும் ஒவ்வொரு இசையைத் தரும் அற்புதத்தை நாம் இங்குக் காண முடிகிறது. தமிழகத்தில் ஒரு சிலகோவில்களில் மட்டுமே இசைத்தூண்கள் உள்ளன.

இங்கு உள்ள தையல்நாயகி அம்மனின் முன் மண்டபத்தில் 4 தூண்களில் ஒவ்வொரு தூணிலும் 14 சிற்பங்கள் வீதம் மொத்தம் 56 சிற்பங்கள் தமிழர்தம் சிற்பக்கலைக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளன. சிறப்பாகத் தூண்களின் மேற்பகுதியில் உள்ள புஷ்ப போதிகையை தூண் உடன் இணைக்கும் விதத்தில் கல்லிலேயே இணைத்திருப்பது ஒரு தனிப் பெரும் சிறப்பாகும்.

இச்சிற்பங்களில் சிவன் அம்மன் உடன் பசுவின் மேல் அமர்ந்திருப்பது பசுக்கள் மெய்மறக்கப் புல்லாங்குழல் வாசிக்கும் கண்ணன் சிற்பம், உச்சிஷ்ட கணபதி சிற்பம், ஆடல் பேரரசன் நடராசர் சிற்பம், காக்கை தன் அருகில் இருக்க வீற்றிருக்கும் சனி பகவான் சிற்பம், ஆதிசேஷன் மீது ஒரு காலை மடித்து ஒரு காலைத் தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் திருமால் சிற்பம் சிவன் மற்றும் அம்மன் தங்கள் வலது காது மேல் வலது கை வைத்து ஆழ்ந்த சிந்தனையில் உள்ள சிற்பம் எனப் பல உலகப் புகழ்பெற்ற சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன.

மண்டபத்தின் கூரையின் மையப் பகுதியில் மூன்று வட்டங்களாக உள்ள மலரின் இரு எதிர்ப் பக்கங்களில் தலைகீழாக இரண்டு கிளிகள் உள்ள சிற்பம் காண்போரை மெய் மறக்க வைக்கும் படி உள்ளது. வைத்தியநாத சாமி முன்பு உள்ள முன் மண்டபத்திலும் பண்டைய இசைக் கருவியை வாசிக்கும் மகளிர், அன்னத்தின் மேல் அமர்ந்திருக்கும் அம்மன் எனப் பல சிற்பங்கள் காணப்படுகின்றன. இதே வளாகத்தில் அழகுராஜாப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகளும் உள்ளன.

கோவிலின் வைத்தியநாதசுவாமி கருவறையைச் சுற்றி விஜயநகரப் பேரரசின் மாமன்னன் கிருஷ்ணதேவராயர் காலத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இக்கல்வெட்டு மூலம் அக்காலத்தில் நாட்டு நிர்வாகத்தை திறம்பட மேற்கொண்டிருந்த நாட்டுச் சபை பற்றியும், கோவிலுக்கு கொடுத்த கொடை பற்றியும் அறியமுடிகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலை புராதனச் சின்னமாக அறிவித்து புராதனச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும். விஜயநகர ஆட்சிக் காலத்துத் தமிழர் தம் கட்டிடக் கலை மற்றும் சிற்பக்கலைக்கும் மிகச்சிறந்த சான்றாக விளங்கும் இந்த கோவில் குடமுழுக்கு நடைபெற்றுச் 37 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக 9.9.1985 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது.

இந்த தகவலை திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் பொறியாளர் சு.ரவிக்குமார் தெரிவித்தார்.

--------------


Next Story