காலி இடங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றுவதற்கு உரிமையாளர்களுக்கு நோட்டீசு- மேயர் இந்திராணி உத்தரவு
காலி இடங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றுவதற்கு உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்ப வேண்டும் என்று மேயர் இந்திராணி உத்தரவிட்டுள்ளார்.
காலி இடங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றுவதற்கு உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்ப வேண்டும் என்று மேயர் இந்திராணி உத்தரவிட்டுள்ளார்.
ஒரு அடுக்கு சாலை
மதுரை மாநகராட்சி மண்டலம் 5-க்கு உட்பட்ட 92, 95, 97, 99 மற்றும் 100 ஆகிய வார்டுகளில் மேயர் இந்திராணி, கமிஷனர் பிரவீன் குமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மாநகராட்சி தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், மாநகர பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத்குமார் உடன் இருந்தனர். 95-வது வார்டில் ஆய்வு செய்த போது நேதாஜி நகர் 2-வது தெருவில் உள்ள மழைநீர் சேகரிப்பு கால்வாயில் அதிகளவு மண் தேங்கி இருப்பதை கண்டு அதை அகற்ற உத்தரவிட்டார். அதற்காக நிதி்யினை உடனே வழங்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனரிடம் கேட்டு கொண்டார். அதே வார்டில் உள்ள சேமட்டான் குளத்தில் சேரும் கழிவு நீரினை தடுக்கவும், குளத்தில் வளர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றவும், 95-வது வார்டில் கவுன்சிலர் அலுவலகம் உடனே கட்டுவதற்கும், தெரு பெயர் பலகைகளில் உள்ள தவறுகளை சரி செய்யும்படியும் அறிவுறுத்தினார்.
வார்டுகளில் காலி மனையிடங்களில் வளரும் செடி கொடிகளை இடத்தின் உரிமையாளருக்கு நோட்டீசு கொடுத்து உடனடியாக அகற்ற வேண்டும். அகற்றாத பட்சத்தில் மாநகராட்சி மூலம் அகற்றி, அதற்குரிய தொகையை உரிமையாளரிடம் வசூலிக்கும்படி கூறினார். தொடர்ந்து மேயர் சவுபாக்கியா நகரில் ஆய்வு செய்தபோது மக்கள் சாலை வசதி, தெரு விளக்கு எரிவதில்லை என புகார் கூறினர். உடனே மேயர், அங்கு குறைந்த மதிப்பீட்டில் ஒரு அடுக்கு சாலை அமைக்கவும், தெரு விளக்குகள் பிரச்சினைக்கு தீர்வு காணவும் அறிவுறுத்தினார். அப்பகுதியில் மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதாக கூறினர். உடனே கமிஷனர், பொதுப்பணித்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு நிலையூர் கண்மாயை தூர்வாரும்படி கேட்டு கொண்டார்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
99-வது வார்டில் ஆய்வு செய்து அங்கு நடந்து வரும் முல்லை பெரியாறு குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மேயர் உத்தரவிட்டார். பாலாஜி நகர் பூங்காவை சீரமைக்க அறிவுறுத்தினார். அந்த வார்டில் கிரிவலப்பாதையில் காசிவிஸ்வநாதர் மலை கோவிலுக்கு செல்லும் மலை பாதை சாலை முதல் சன்னதி தெரு முடிய சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை சீரமைக்க மேயரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு முன்னுரிமை கொடுத்து சீரமைக்கும்படி உத்தரவிட்டார். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கமிஷனர் பிரவீன் குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
92-வது வார்டில் மேயர் ஆய்வு செய்து நல்லதங்காள் ஊருணியை தூர்வாரவும், கண்மாயை சுற்றி நடைபாதை அமைத்து மரம் நடுவதற்கும் அறிவுறுத்தினார். 100-வது வார்டில் அவனியாபுரம் நகர சுகாதார அலுவலகத்தை பார்வையிட்டு போதிய இருக்கைகள் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் நிற்பதை கண்டு உடனடியாக அங்கு இருக்கைகள் அமைத்து அந்த போட்டோவை தனக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். 100-வது வார்டில் மல்லிகை நகர் பொதுமக்கள் தங்களது பகுதியில் குப்பைகள் அள்ள மாநகராட்சி ஊழியர்கள் வருவதில்லை என புகார் தெரிவித்தனர். உடனே மேயர் அங்கு பணியாளர்களை அமர்த்தி, துப்புரவு பணியினை சீரமைக்கும்படி கூறினார்.
இந்த ஆய்வின்போது மண்டல தலைவர் சுவிதா, செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி கமிஷனர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.