துபாய்க்கு நாளை கல்வி சுற்றுலா செல்லும் சென்னை பள்ளி மாணவர்களுக்கு மேயர் பிரியா வாழ்த்து
துபாய்க்கு நாளை கல்வி சுற்றுலா செல்லும் சென்னை பள்ளி மாணவர்களை மேயர் பிரியா வாழ்த்தினார்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையானது ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் கிழக்கு, 'விங்ஸ் டு பிளை' அமைப்பின் வாயிலாக கடந்த 7 வருடங்களாக 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் சென்னை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலாவாக அழைத்து சென்று வருகின்றனர்.
இதில் 2016-ம் ஆண்டு மலேசியாவுக்கும், 2017-ம் ஆண்டு ஜெர்மனிக்கும், 2018-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நாசாவிற்கும், 2019-ம் ஆண்டு சிங்கப்பூருக்கும், 2022-ம் ஆண்டு லண்டன் நகருக்கும் கல்விச்சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
2020 மற்றும் 2021-ம் ஆண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடு அழைத்து செல்ல இயலாத காரணத்தினால், அவர்களின் சாதனையை பாராட்டி மடிக்கணினிகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
துபாய் செல்கின்றனர்
இதன் தொடர்ச்சியாக, 2022-23-ம் கல்வியாண்டில் 'விங்ஸ் டு பிளை' திட்டத்தின் மூலம் சென்னை பள்ளிகளில் "தொழில் முனைவோர் திறன் மேம்பாடு" என்ற தலைப்பில் மூன்று நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
முதல் சுற்றில் பள்ளி அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 478 மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இறுதி சுற்றுக்கான போட்டிகளில் தேர்வுபெற்ற 9 மாணவ-மாணவிகள் நாளை(புதன்கிழமை) கல்வி சுற்றுலாவாக துபாய்க்கு செல்ல உள்ளனர்.
மேயர் வாழ்த்து
2022-23-ம் கல்வியாண்டில்'விங்ஸ் டு பிளை' திட்டத்தின் மூலம் கல்வி சுற்றுலாவாக துபாய்க்கு செல்லும் சென்னை பள்ளி மாணவ-மாணவிகளை மேயர் பிரியா நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் சந்தித்து வாழ்த்தி, பாராட்டினார்.
இந்த கல்வி சுற்றுலாவில் 10-ந்தேதி முதல் 11, 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் துபாயில் தொழில் நடத்தும் நிறுவனங்கள் மற்றும் முக்கிய இடங்களை இந்த மாணவர்கள் பார்வையிட்டு, 14-ந்தேதி மீண்டும் சென்னை திரும்புகின்றனர்.
நினைவுப்பரிசு
இதையடுத்து 2022-23-ம் கல்வியாண்டில் நடைபெற்ற 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த புலியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மேயர் பிரியா நினைவுப்பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ் குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் (கல்வி) ஷரண்யா அரி, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) த.விஸ்வநாதன், ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் கிழக்கு செயலாளர் வி.பிரபுராம், 'விங்ஸ் டு பிளை' திட்ட தலைவர் ச.ராதிகா மற்றும் கல்வி அலுவலர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.