நெல்லையில் 'மக்களை தேடி மேயர்' திட்ட சிறப்பு முகாம்
நெல்லையில் ‘மக்களை தேடி மேயர்’ திட்ட சிறப்பு முகாம் தொடங்கப்பட்டது.
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டு பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வண்ணம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் மாநகராட்சி கூட்ட அரங்கில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் தொலைவில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த முதியவர்கள் உள்ளிட்டவர்கள் மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு வர சிரமம் அடைந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று அவர்களது குறைகளை கேட்கும் வகையில் 'மக்களை தேடி மேயர்' என்ற திட்டத்தை முதன் முறையாக நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தொடங்கினார். அதன்படி தச்சநல்லூர் பகுதியில் 'மக்களை தேடி மேயர்' திட்ட சிறப்பு முகாம் அங்குள்ள வரிவசூல் மையத்தில் நடைபெற்றது. மேயர் சரவணன் முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
இதில் மண்டலத்திற்குட்பட்ட 1, 2, 13, 14-வது வார்டு பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
முகாமில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது. குடிநீர் கட்டணம் பெயர் மாற்றம், சொத்து பெயர் மாற்றம் குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாலையில் உரிய பெயர் மாற்றத்துடன் ஆணை வழங்கப்பட்டது.
மேலும் அங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மண்டலத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சிகளில் துணை மேயர் ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர் ரேவதி பிரபு, செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி ஆணையாளர் லெனின், சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.