குடிநீர் திட்ட பணிகளை மேயர் சரவணன் ஆய்வு
அரியநாயகிபுரம் பகுதியில் குடிநீர் திட்ட பணிகளை மேயர் சரவணன் ஆய்வு செய்தார்.
நெல்லை மாநகராட்சிக்கு தாமிரபரணி ஆற்றில் அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து நாள் ஒன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் குடிநீரை பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அரியநாயகிபுரம் அணைக்கட்டு அருகே கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, அங்கு சுத்திகரிக்கப்பட்டு குடிதண்ணீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்க திட்டமிட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரியநாயகிபுரம் அணைக்கட்டு பகுதியில் குடிநீர் திட்ட பணிகளை மேயர் பி.எம்.சரவணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி கவுன்சிலர்கள் பவுல்ராஜ், சுப்பிரமணியன், சுந்தர், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பைஜூ, இளநிலை பொறியாளர் விவேகானந்தன், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் டேனிஸ், இளநிலை பொறியாளர் ஆறுமுகம்நயினார், உதவி பொது மேலாளர் சக்திவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.