வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மேயர் ஆலோசனை -கால்வாய்களை தூர்வார உத்தரவு


வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மேயர் ஆலோசனை -கால்வாய்களை தூர்வார உத்தரவு
x

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மேயர் இந்திராணி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கால்வாய்களை தூர்வார உத்தரவிட்டார்.

மதுரை


வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மேயர் இந்திராணி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கால்வாய்களை தூர்வார உத்தரவிட்டார்.

ஆலோசனை கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம், மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடந்தது. கமிஷனர் சிம்ரன்ஜித் சிங் காலோன் முன்னிலை வகித்தார். மேயர் இந்திராணி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை அதிகஅளவில் பெய்து வருகிறது. இந்த பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக மாநகராட்சி பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கக்கூடிய இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து அதனை சீர்செய்ய வேண்டும்.

பராமரிப்பு

மழைநீர் வடிகால்கள், வாய்க்கால்கள், சிறுபாலங்கள் போன்ற நீர் செல்லக் கூடிய அமைப்புகளை தூர்வாரி மழைநீர் தடையின்றி செல்ல வழி வகை செய்ய வேண்டும். மழைக்காலத்தை எதிர்கொள்ள மண்டல வாரியாக மழைநீர் உறிஞ்சு வாகனங்கள், கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள், ஜெனரேட்டர்கள், மின்மோட்டார்கள், பாதாளச் சாக்கடை மூடிகள், கொசு புகைப்பரப்பும் இயந்திரங்கள், மணல் மூடைகள், தெருவிளக்கு பராமரிப்பு வாகனங்கள் உள்பட உபகரணங்களை முழு அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சாலையோரங்களில் மின்வயர்கள் செல்லும் வழிகள் மற்றும் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். மீட்பு பணியினை விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

24 மணி நேரமும்...

மேலும் பேரிடர் காலத்தில் பொதுமக்கள் தங்கும் வகையில் அருகில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், திருமண மண்டபங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். தத்தனேரி சுரங்க நடைபாதை, கர்டர் பாலம் மற்றும் இதர சுரங்க நடைபாதைகளில் மழைக்காலங்களில் விரைந்து நீரை வெளியேற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் இரவு நேரங்களிலும் பணிகளை மேற்கொள்ள தேவையான பணியாளர்களை வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குடிநீரேற்று நிலையம், மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத்தொட்டிகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். குடிநீரில் குளோரின் அளவை சரியாக கலக்க வேண்டும். ஏரிகள், கண்மாய்கள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பொதுப்பணித்துறையினர் பராமரித்து வரும் கண்மாய்களின் உறுதி தன்மையை உறுதி செய்ய வேண்டும். 24 மணி நேரமும் மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றிட தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, துணை கமிஷனர் முஜிபூர்ரகுமான், நகர் பொறியாளர் லட்சுமணன், நலர் நல அலுவலர் வினோத் குமார், உதவி கமிஷனர்கள் மனோகரன், வரலட்சுமி, சையது முஸ்தபாகமால், திருமலை, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மேயர் இந்திராணி, செல்லூர் 60 அடி சாலையில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகளை பார்வையிட்டார்.


Next Story