எம்.பி.ஏ. நுழைவு தேர்வுக்கான இலவச பயிற்சி
ஆதிதிராவிடர்-பழங்குடியின மாணவர்களுக்கு எம்.பி.ஏ. நுழைவு தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர்-பழங்குடியின மாணவர்களுக்கு எம்.பி.ஏ. நுழைவு தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
நுழைவு தேர்வு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு எம்.பி.ஏ. நுழைவு தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு தாட்கோ நிறுவனம் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்திய மேலாண்மை கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்ப கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் முதுகலை வணிக மேலாண்மை மேற்படிப்பில் நடப்பாண்டில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள பொது நுழைவு தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது.
ரூ.25 லட்சம் கல்விக்கடன்
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களும், கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இந்த பயிற்சியை பெறுவதற்கு விண்ணப்பித்துக் பயன்பெறலாம். இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதேபோல் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தரம் வாய்ந்த கல்வி, தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனத்தின் மூலமாக பயிற்சியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
கல்லூரிகளில் இடம் கிடைத்தவுடன் எம்.பி.ஏ. படிப்பதற்கு ரூ.25 லட்சம் செலவினை தாட்கோ அல்லது வங்கிகள் மூலமாக கல்வி கடனாக பெற்று தரப்படும். இந்த பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு தேவையான மடிக்கணினி வசதிகள் தாட்கோ மூலமாக ஏற்பாடு செய்துதரப்படும். எனவே விண்ணப்பிக்க தகுதிவாய்ந்த மாணவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.