எம்.பி.ஏ. படிக்க தாட்கோ மூலம் நுழைவுத்தேர்வு பயிற்சி இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம்
எம்.பி.ஏ. படிக்க தாட்கோ மூலம் நுழைவுத்தேர்வு பயிற்சி இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் திறனுக்கேற்ப பல்வேறு பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இந்திய மேலாண்மை கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்ப கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் முதுகலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.) படிப்பு பயில இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள பொது நுழைவுத்தேர்விற்கான (கேட்) இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அல்லது கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். இத்தேர்விற்கு விண்ணப்பிப்பதும், தேர்வு நடைபெறுவதும் இணையதளம் வழியாகவே நடைபெறும். இந்த பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்து தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்தகட்ட தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு சேர்க்கை கிடைத்தவுடன் எம்.பி.ஏ. பயில தாட்கோ அல்லது வங்கிகள் மூலமாக சுமார் ரூ.25 லட்சம் கல்விக்கடன் வழங்கப்படும். மேலும் இப்பயிற்சிக்கு தேவையான மடிக்கணினி வசதிகள் தாட்கோ மூலமாக ஏற்பாடு செய்து தரப்படும். எனவே இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.