ரஷியாவில் 5 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சேர்க்கை
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தகுதி பெறுகின்றனர். இதற்கிடையே, ரஷிய நாட்டின் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் சுமார் 5 ஆயிரம் பேருக்கு இந்த வருடம் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தகுதி பெறுகின்றனர். இதற்கிடையே, ரஷிய நாட்டின் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் சுமார் 5 ஆயிரம் பேருக்கு இந்த வருடம் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ரஷிய தூதரக கலாசார மையத்தின் இந்திய மாணவர்களுக்கான சேர்க்கை பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரெச்கோ ஓலிஸ்யா கூறியதாவது:-
5 ஆயிரம் இடங்கள்
ரஷியாவில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் 2023-24-ம் கல்வியாண்டுக்கு இந்திய மாணவர்களுக்கு 5 ஆயிரம் மருத்துவ இடங்களை ஒதுக்கியுள்ளன. இதற்கான நேரடி மாணவர் சேர்க்கை வருகிற 16-ந் தேதி மதுரையில் நடக்கிறது. அத்துடன், ரஷியாவில் உள்ள மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளின் கல்விக்கண்காட்சியும் நடக்க உள்ளது.
இந்திய தேசிய மருத்துவ கமிஷனின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ரஷியப் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே கடைப்பிடித்து வருகின்றன. ரஷியாவின் எம்.பி.பி.எஸ். கல்வி இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரஷிய பல்கலைக்கழகங்கள் உதவியதுடன், இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் தேவையான உதவிகளை செய்து கொடுத்தது.
நீட் தேர்வில் தேர்ச்சி
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. சி.இ.டி. மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ். போன்ற முன் தகுதித்தேர்வுகள் தேவையில்லை. கல்விக்கட்டணமாக வருடத்துக்கு 3,500 முதல் 6 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை செலவாகும். ரஷிய அரசின் வருடாந்திர உதவித்தொகை தேர்வு செய்யப்படும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும்.
அரசு கல்விக்கு அதிக மானியம் வழங்குவதுடன், இந்திய மாணவர்களுக்கான சிறப்பு தகவமைப்பு திட்டங்கள் மூலம் பல்கலைக்கழகங்களும் கல்வி உதவி வழங்குகின்றன. 600-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் 200 நாடுகளை சேர்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 70 பல்கலைக்கழகங்களில் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது உடன் இந்திய மாணவர் சேர்க்கை பிரிவு இயக்குனர் சுரேஷ் மற்றும் தூதரக அதிகாரிகள் இருந்தனர்.