மீனாட்சி அம்மன் கோவிலில் புகைப்படம் எடுக்க கட்டுப்பாடு கோரிய வழக்கு தள்ளுபடி -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மீனாட்சி அம்மன் கோவிலில் புகைப்படம் எடுக்க கட்டுப்பாடு கோரிய வழக்கு தள்ளுபடி -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

மீனாட்சி அம்மன் கோவிலில் புகைப்படம் எடுக்க கட்டுப்பாடு கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த உதயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

உலக பிரசித்தி பெற்ற கோவிலாக மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் விளங்குகிறது. இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு செல்ல தடை விதி்க்கப்பட்டு உள்ளது. கோவிலின் உள்ளே இருக்கும் சிலைகள் மற்றும் சிற்பங்களை புகைப்படங்கள் எடுக்கவும் அனுமதி கிடையாது.

ஆனால் குறிப்பிட்ட சில போட்டோ கடைக்காரர்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிலைகள், சிற்பங்களை போட்டோ, வீடியோ எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு எந்த வகையில் அனுமதி வழங்கப்பட்டது என்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டதற்கு, அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை என கோவில் நிர்வாகம் தரப்பில் பதில் அளித்து உள்ளனர்.

எனவே பாதுகாப்பு காரணங்களை காட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிற்பங்கள், சிலைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கவும், ஏற்கனவே சமூகவலைதளங்களில் பதிவிட்டவற்றை நீக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் ஒப்பந்தம் கோரப்பட்டு, அதன் அடிப்படையில் அங்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கப்படுகின்றன. எந்த விதிமீறலும் இல்லை என்றார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story