வலதுசாரி அரசியல் குறித்தே பேசினோம்: விருதுநகர் தொகுதியை கேட்டு நான் ராகுல்காந்தியை சந்திக்கவில்லை- துரை வைகோ பேட்டி


வலதுசாரி அரசியல் குறித்தே பேசினோம்: விருதுநகர் தொகுதியை கேட்டு நான் ராகுல்காந்தியை சந்திக்கவில்லை- துரை வைகோ பேட்டி
x

வலதுசாரி அரசியல் குறித்து பேசினேன். விருதுநகர் தொகுதியை எனக்கு தர வேண்டும் என்று கேட்பதற்காக அவரை சந்திக்கவில்லை என்று துரை வைகோ கூறினார்.

ஈரோடு

வலதுசாரி அரசியல் குறித்து பேசினேன். விருதுநகர் தொகுதியை எனக்கு தர வேண்டும் என்று கேட்பதற்காக அவரை சந்திக்கவில்லை என்று துரை வைகோ கூறினார்.

80 சதவீதம் வெற்றி

மாமனிதன் வைகோ ஆவணப்பட வெளியீடு நிகழ்ச்சிக்கு பின்னர் நேற்று ஈரோட்டில் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேர்தல் ரீதியாக வைகோ வெற்றி பெறவில்லை. ஆனால், 56 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், சமூகத்துக்காகவும், தமிழர் நலன், தமிழக மக்களுக்காக அவர் எடுத்த முயற்சிகளில், 80 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளார்.

ராகுல்காந்தியுடன் சந்திப்பு

தெலுங்கானாவில் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடர்ந்தபோது நானும் அவருடன் பங்கேற்றேன். அப்போது நாங்கள் வலதுசாரி அரசியலால் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் ஏற்பட்டு இருக்கும் சிக்கல்கள் குறித்து பேசினோம். தமிழகம் உள்பட இந்தியாவில் வலதுசாரிகளால் ஏற்படும் தாக்கம், பாதிப்புகள் குறித்து பேசினோம்.

ஆனால் நான் விருதுநகர் தொகுதியை எனக்கு ஒதுக்கித்தர வேண்டும் என்று பேசுவதற்காக சென்றதாக நாளிதழ் ஒன்று (தினத்தந்தி அல்ல) செய்தி வெளியிட்டது. அது தவறு. நான் எந்த தொகுதியை பெறுவது பற்றியும் அவருடன் பேசவில்லை.

மத்திய அரசு நிர்ப்பந்தம்

விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியதால் ஏற்படும் இழப்பை சமாளிக்க, ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற வணிக பால் பாக்கெட்டுகளின் விலையை மட்டும்தான் அரசு உயர்த்தி இருக்கிறது. மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால், மின் கட்டணத்தை உயர்த்தும் நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டது.

இவ்வாறு ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ கூறினார். பேட்டியின் போது மூத்த தலைவர் அ.கணேசமூர்த்தி எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story