மகனை ஆதரிப்பது சந்தர்ப்பவாத அரசியல் ம.தி.மு.க.வை தி.மு.க.வு.டன் இணைத்து விடலாம்- வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி கடிதம் முழுவிவரம்
மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்து விடலாம் என்று வைகோவிற்கு அக்கட்சியின் மூத்த நிர்வாகி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என்று வைகோவிற்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார். மதிமுகவை திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலசிறந்தது என்று திருப்பூர் துரைசாமி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், மகனை அரவணைப்பதும் சந்தர்ப்பவாத அரசியலும் எள்ளி நகையாட வைத்து விட்டது எனவும் வைகோவை கடுமையாக சாடும் வகையிலும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் பொதுச்செயளலார் வைகோவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில்
மதிமுக தொடங்கப்பட்டபோது வைகோ வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரையாற்றினார். அவரது பேச்சைக் கேட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர். ஆனால் வைகோவின் சமீபகால குழப்பமான அரசியல் நிலைப்பாடு காரணமாக முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியை விட்டு படிப்படியாக தி.மு.க.வுக்கே சென்றுவிட்டனர்.
மகனை ஆதரிப்பதும் அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது. இதனை வைகோ இன்னும் உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள், மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க, ம.தி.மு.க.வை தாய் கழகமான தி.மு.க.வுடன் இணைத்துவிடுவது நல்லது. இவ்வாறு திருப்பூர் துரைசாமி கூறி உள்ளார்.
அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமியின் இந்த கடிதம் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.