தகுதியான அனைவருக்கும் நலத்திட்டங்கள் விரைவாக கிடைக்க நடவடிக்கை
தகுதியான அனைவருக்கும், நலத்திட்டங்கள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை,
கிராமசபை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம், முகுந்தராயபுரம் ஊராட்சியில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அக்ராவரம் ஏ.கே. முருகன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர் திலகவதி குணசேகரன், துணைத் தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
வீடற்றவர்களுக்கு வீடு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும், அனைத்து நலத் திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் பல்வேறு முகாம்கள் வட்டங்கள் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால் அப்பணிகளை விரைவுபடுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள வீடற்ற நபர்களை கணக்கெடுத்து வீடு கட்டுவதற்காக, அரசுக்கு அறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆணை கிடைத்தவுடன் அவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும். இப்பகுதியில் யாரேனும் பள்ளி படிப்பை தொடராமல் இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தர வேண்டும். அதன் மூலம் அவர்கள் தொடர்ந்து கல்வி பயில பயனுள்ளதாக இருக்கும்.
விரைவாக...
அரசின் திட்டங்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்றடைவதை, முதல்-அமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார். தகுதியான அனைவருக்கும், அனைத்து நலத் திட்டங்களும் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், வாலாஜா ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தினேஷ் குமார், பாண்டியன், காமாட்சி வில்வநாதன், ரேணு, சிவகாமி தட்சிணாமூர்த்தி, ரேவதி பாலு, சசி சிவா, ஜோதி ராஜா, ஊராட்சி செயலாளர் வினோத்குமார் மற்றும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.