குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை


குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.

நாகப்பட்டினம்


குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.

மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

நாகை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

சரபோஜி:- கடந்த 2020-21-ம் ஆண்டு பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட பச்சைபயறு, உளுந்து ஆகியவற்றிற்கும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அது அறிவிப்பாகவே உள்ளது. தற்போது வரை கிடைக்கவில்லை. காவிரி டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நடப்பு ஆண்டிற்கான பயிர் கடன் தடையில்லாமல் வழங்க வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு

செயலாளர்:- வேளாண்மை துறை அதிகாரிகள் வந்து இருந்தால் தகவல் கொடுக்கவும் என்றார். ஆனால் வேளாண்மை துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து செயலாளர் உழவன் செயலி என்ற ஆப்பை உங்களது செல்போனில் டவுன் லோடு செய்து வைத்தால் தினசரி நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

கணேசன்:- மஞ்சக்கொல்லை, பொரவாச்சேரி உள்ளிட்ட நாகை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவது போல் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், தலைவர்களுக்கும் மதிப்பூதியம் வழங்க வேண்டும்.

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி

தலைவர்:- நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி நாகை நகர பகுதியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குடிநீர் ஆதாரம் இல்லை என நாகை சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது. இருப்பினும் ஆஸ்பத்திரி இயங்க செய்ய தேவையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் 3 மாத காலத்தில் குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகளை நிவர்த்தி செய்து ஆஸ்பத்திரி இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார் என்றார்.

கவுசல்யா:- வேட்டைகாரணிருப்பு பகுதியில் தபால் நிலையம் சாலை, திருப்பூண்டி கிராமப்புற சாலை உள்ளிட்டவை மோசமாக உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி தரமான சாலை அமைத்து தர வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்.


Next Story