இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை
இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊட்டியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
ஊட்டி
இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊட்டியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
ஆலோசனை கூட்டம்
ஊட்டியில் கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் நான் முதல்வன் திட்டம் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசியதாவது:- பள்ளியில் மாணவர்கள் படிக்கும்போதே உயர்கல்வியில் என்ன படிக்கலாம்? என்பதை அறிந்துகொள்ள போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களை சார்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சிறப்பு தொழில் திறன்
பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு இந்த திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி நான் முதல்வன் திட்ட இணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.க்களில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் விரும்பும் தொழிற்திறன் பயிற்சி பெற வழிவகை செய்ய வேண்டும். குறிப்பாக கல்லூரி படிப்பு முடித்தவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் வகையில், அவர்களுக்கு கூடுதல் திறன் பயிற்சி அளிக்க வேண்டும் மாவட்டத்தில் சிறப்பு தொழில் திறன்களை கண்டறிய வேண்டும். தொழில் துறை நிறுவனங்களை பயிற்சி வழங்குபவர்களாகவும் மாற்றி அங்கேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
திறம்பட செயல்பட வேண்டும்
இத்திட்டத்தின் மூலம் அதிகளவில் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் திறம்பட செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் சி.வெங்கடகிருஷ்ணன் மற்றும் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.