சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க நடவடிக்கை
மயிலாடுதுறை நகரில் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க மூத்த குடிமக்கள் அவை வலியுறுத்தல்
மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் உசேன், துணை செயலாளர் ரமணன், செயற்குழு உறுப்பினர் திருவள்ளுவன், சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர் செல்வகுமார் வரவேற்று பேசினார். மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து அதிகமாக காணப்படும் நகராட்சி கிட்டப்பா அங்காடி முன்பு ஆர்ப்பாட்டமும், கூட்டமும் நடத்த அனுமதிக்க கூடாது. மயிலாடுதுறை நகரில் பல இடங்களில் அகற்றப்படாமல் உள்ள குப்பைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். நகரில் ஆங்காங்கே சாலைகளில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்தி, இதை தடுக்க நிரந்தர தீர்வு காணவேண்டும். நகரில் உள்ள வேகத் தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் செயலாளர் தியாகராஜன், பொருளாளர் கலியபெருமாள், நிர்வாகிகள் கோவிந்து, சாமி.கணேசன், கோவி.சுந்தர்ராஜன், சாமிதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.