குடிநீர் தேவைக்கு அணைகளில் கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை:கனிமொழி எம்.பி. தகவல்


குடிநீர் தேவைக்கு அணைகளில் கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை:கனிமொழி எம்.பி. தகவல்
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடிமாவட்டத்தில் குடிநீர் தேவைக்கு அணைகளில் கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

குடிநீர் தட்டுப்பாடு

தாமிரபரணி ஆற்றில் கலியாவூர், அகரம், முறப்பநாடு, முத்தாலங்குறிச்சி, கருங்குளம், சுப்பிரமணியபுரம், பொன்னன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்தோப்பு, குரங்கணி, ஏரல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதுள்ள சூழலில் மணிமுத்தாறு அணையில் இருப்பிலுள்ள தண்ணீரை கணக்கில் கொண்டு ஆற்றில் குடிநீருக்கு குறைந்தளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஒருவார காலமாக தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால், பொன்னன்குறிச்சி, சுப்பிரமணியபுரம் பகுதிகளிலுள்ள உறைகிணறுகளில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தேவையான தண்ணீரை பம்பிங் செய்ய முடியவில்லை. இதனால், சாத்தான்குளம், உடன்குடி, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

கனிமொழி எம்.பி.-அமைச்சர் ஆய்வு

இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் தாமிரபரணி ஆற்றுப்படுகைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது கலெக்டர், ஆற்றில் வரும் தண்ணீரை உறைகிணறுகள் அமைந்துள்ள பகுதிக்கு கொண்டு செல்லுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதன்பேரில், தாமிரபரணி ஆற்றில் உறைகிணறுகள் பகுதிக்கு தண்ணீரை திருப்பி விடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கனிமொழி எம்.பி., தலைமையில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், கலெக்டர், எம்.எல்.ஏ., ஆகியோர் பொக்லைன் மூலமாக கூட்டுக்குடிநீர் திட்ட உறைகிணறுகளுக்கு தண்ணீர் திருப்பி விடும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் கனிமொழி எம்.பி., கூறுகையில்,

உறைகிணறுகளுக்கு தண்ணீர்

நெல்லை மாவட்ட அணைப்பகுதிகளில் பருவமழை தொடங்கவில்லை. இதனால், குடிநீர் திட்ட பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆற்றில் குடிநீருக்காக குறைந்த அளவு தண்ணீரே வருகிறது. குறிப்பாக பொன்னன்குறிச்சி பகுதிகளிலுள்ள கூட்டுக்குடிநீர் திட்ட உறைகிணறுகள் அனைத்தும் ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள நிலையில் தண்ணீர் ஆற்றின் வட பகுதி வழியாக சென்று ஸ்ரீவைகுண்டம் அணைக்கு செல்கிறது. இதனால், உறைகிணறுகளில் இருந்து தேவையான தண்ணீரை பம்பிங் செய்ய இயலவில்லை.

இதை தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் மூலமாக உறைகிணறுகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும், உறைகிணறுகளில் இருந்து தண்ணீரை பம்பிங் செய்யும் பணிகள் வழக்கம்போல தொடங்கப்பட்டுள்ளது.

அணைகளில் தண்ணீர் திறக்க...

நெல்லை மாவட்ட அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்துவிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் பெறப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களின் குடிநீர் தேவைகளும் விரைவில் நிவர்த்தி செய்யப்படும்.

வரும் காலங்களில் ஆற்றில் வீணாகும் தண்ணீரை சேமிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக செல்லாத வகையில் குளங்களில் இருப்பு வைக்கப்படும். தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்திற்கு தடையாக இருக்கும் சீமைகருவேல மரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

கலந்து கொண்டவர்கள்

ஆய்வின்போது, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ராமசாமி, குமார், தாசில்தார் சிவக்குமார், தி.மு.க.மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story