மோட்டார் சைக்கிள் திருடிய மெக்கானிக் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய மெக்கானிக் கைது
குலசேகரம்:
குலசேகரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போனது. இதில் அண்ணாநகரை சேர்ந்த ஸ்ரீகண்டன் (வயது 54) என்பவர் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் குலசேகரம் அருகே செறுதிக்கோணம் அரியாம்பகோடு பகுதியில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை பிரித்து வைத்திருப்பதாகவும், அவருடைய நடவடிக்கை சந்தேகப்படும்படியாக இருப்பதாகவும் தெரியவந்தது. இதனை அறிந்த ஸ்ரீகண்டன் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அவருடைய மோட்டார் சைக்கிளைத் தான் அந்த வாலிபர் ஒவ்வொரு பகுதியாக பிரித்து வைத்திருப்பது தெரியவந்தது.
உடனே அவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் சுமித் (27) என்பதும், மெக்கானிக்காக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
போதிய வருமானம் கிடைக்காததால் மோட்டார் சைக்கிளை திருடியதாக கூறப்படுகிறது. மேலும் வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் சுமித்துக்கு தொடர்பு இருக்கிறதா? எனவும் விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமித்தை கைது செய்தனர்.