கடலில் பிணமாக மிதந்த மெக்கானிக்
முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கடலில் பிணமாக மிதந்த மெக்கானிக் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளச்சல்:
முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கடலில் பிணமாக மிதந்த மெக்கானிக் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெக்கானிக்
நாகர்கோவில் அருகே கோட்டார் இளங்கடையை சேர்ந்தவர் தாசன். இவருடைய மகன் சகாய சுரேஷ் (வயது 35). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் முட்டம் தனியார் மீன்பிடி துறைமுகம் அருகில் உள்ள ஒரு மரைன் சர்வீஸ் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு துறைமுகத்தில் படகுகள் நிற்கும் பகுதியில் சகாய சுரேஷ் இறந்த நிலையில் மிதந்தார். இதை பணியில் இருந்த துறைமுக காவலர் சந்திரன் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து அவர் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
கடலில் விழுந்து...
மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சகாய சுரேஷிற்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாகவும், அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. சகாய சுரேஷ் விசைப்படகுகளில் பழுதுபார்த்து கொண்டிருந்தபோது வலிப்பு வந்து தவறி கடலில் விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்புதான் அவர் எப்படி? இறந்தார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.