எந்திரம் மூலம் நிலக்கடலை சாகுபடி பணிகள்


எந்திரம் மூலம் நிலக்கடலை சாகுபடி பணிகள்
x

எந்திரம் மூலம் நிலக்கடலை சாகுபடி பணிகள்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் எந்திரம் மூலம் நிலக்கடலை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் இது அமைந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நெற்களஞ்சியம்

தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வருகிறது. இங்கு நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு, வாழை, வெற்றிலை, உளுந்து, எள், மரவள்ளிக்கிழங்கு, நிலக்கடலை, பூக்கள் போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு கூலி தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாகி விட்டது. இதன் காரணமாக விவசாயத்தில் இன்று நவீன எந்திரங்கள் பயன்பாடு என்பது மிக அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது.

தொழிலாளர்கள் பற்றாக்குறை

அந்த வகையில் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெருமளவு எந்திர பயன்பாட்டை மட்டுமே அதிகம் செயல்படுத்தி வருகின்றனர். காரணம் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வாக நவீன எந்திரங்கள் விவசாயிகளுக்கு கைகொடுக்கின்றன. விவசாய தொழிலாளர்கள் கட்டிடப் பணி உட்பட பல்வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர்.

இதனால் விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபகரமாக மாறிவிட்டது. நடவு பணியில் இருந்து களைப்பறித்தல், உரம் தெளித்தல் உட்பட அனைத்திற்கும் விவசாய தொழிலாளர்கள் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் தான் நவீன ஏந்திரங்கள் கண்டுபிடிப்புகள் விவசாயிகளுக்கு பெரும் வரப் பிரசாதமாக மாறி உள்ளது.

எந்திரங்கள் பயன்பாடு

முன்பு ஏர் பூட்டி உழவு செய்தனர். அதன் பின்னர் டிராக்டர் மூலம் உழவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பின்னர் நடவுப்பணிகளிலும் ஆட்களுக்கு பதிலாக எந்திரங்கள் மூலம் தற்போது நடவு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. களை எடுப்பதற்கும் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நவீன தொழில்நுட்பங்கள், விஞ்ஞான வளர்ச்சி ஆகியவற்றால் வேளாண் தொழிலில் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. அந்தளவிற்கு விவசாய தொழிலில் நவீன எந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் வேங்கராயன் குடிகாடு பகுதியில் நிலக்கடலை சாகுபடி பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நிலக்கடலை சாகுபடி

மானாவாரி பகுதியான இங்கு விவசாயிகளுக்கு தண்ணீர் என்பது தட்டுப்பாடான நிலையில் தான் இருந்து வருகிறது. அதனால் தான் கடலை, உளுந்து போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பணிகளுக்கு நவீன எந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது எரிபொருள் இன்றி எளிமையாக மனித சக்தியை பயன்படுத்தி நிலக்கடலை சாகுபடி செய்யும் எந்திரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதை பயன்படுத்தி விவசாயியே தனது நிலத்தில் நிலக்கடலையை ஊன்றி சாகுபடியை தொடங்கி விடலாம். விரைவாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் கடலையை விதைக்க முடியும். கடலை மட்டுமின்றி, உளுந்து, பயறு போன்றவற்றையும் இந்த எந்திரத்தை கொண்டு நடவு செய்யலாம்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இது குறித்து நிலக்கடலை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் கூறுகையில், வானம் பார்த்த பூமியாக இப்பகுதி உள்ளது. இதனால் விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பது என்பது அரிதாக உள்ளது. இந்நிலையில் சாகுபடிக்கு வந்துள்ள நவீன எந்திரம் பெரும் உதவியாக உள்ளது. இதனால் வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என கவலை இல்லை. பொருளாதார மிச்சமும் ஏற்படுகிறது.. தற்போது தனியார் வாயிலாக இந்த எந்திரம் வாடகைக்கு விடப்படுகிறது. முன்பு வீட்டுக்கு ஒரு கலப்பை இருக்கும். அதுபோல் இப்பகுதி விவசாயிகளின் சிரமத்தை போக்கும் இந்த எந்திரத்தை அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலும் உயரும்.என்றார்.


Related Tags :
Next Story