41 இடங்களில் சிறார்களுக்கு மருத்துவ முகாம்


சேலம் சரகரத்தில் 41 இடங்களில் சிறார்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 607 பேர் பயனடைந்தனர்.

சேலம்

சேலம் சரகரத்தில் 41 இடங்களில் சிறார்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 607 பேர் பயனடைந்தனர்.

சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி

சேலம் சரகத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் காவல் துறையின் சார்பில் 41 சிறார் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 890 சிறுவர்களும், 483 சிறுமிகளும் என மொத்தம் 1,373 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, இந்த சிறார் மன்றங்களை சிறப்பாகவும், அதில் உள்ள சிறுவர்-சிறுமிகளை ஊக்கவிக்கவும், சிறார் மன்றங்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறார்.

தோல் மருத்துவ முகாம்

அதன் ஒரு பகுதியாக சிறுவர், சிறுமிகளுக்கு ஜூனியர், சீனியர் பிரிவுகளின் கீழ் பல்வேறு தலைப்புகளில் கட்டுரை போட்டிகளும், போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமான போட்டிகளும் நடத்தப்பட்டன. தற்போது சிறுவர்-சிறுமிகளின் உடல் நலனை மேம்படுத்தும் வகையில் சிறப்பு டாக்டர்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் 41 இடங்களில் தோல் பரிசோதனை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இதில் சேலம் மாவட்டத்தில் 138 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 131 பேரும், தர்மபுரி மாவட்டத்தில் 169 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 169 பேரும் என மொத்தம் 607 சிறுவர், சிறுமிகள் பயனடைந்தனர். அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story