பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்


பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:45 AM IST (Updated: 25 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரை அடுத்த காட்டூரில் நடந்த பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பள்ளி குழந்தைகளுக்கு கண் கண்ணாடி- கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

திருவாரூர்

திருவாரூரை அடுத்த காட்டூரில் நடந்த பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பள்ளி குழந்தைகளுக்கு கண் கண்ணாடி- கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்டந்தோறும் துறைவாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில், பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று திருவாரூரை அடுத்த காட்டூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

11 அரங்குகள்

காசநோய் பிரிவு துணை இயக்குனர் புகழ், பொது சுகாதார பிரிவு துணை இயக்குனர் ஹேமசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் ஏராளமான சிறப்பு டாக்டர்கள், தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் 300 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த முகாமில் சுகாதார துறை, உணவு பாதுகாப்பு துறை, குடும்பம் நலத்துறை, சித்தமருத்துவ துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் 11 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

மருத்துவக்காப்பீடு திட்டம்

முகாமில் திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் காலை முதல் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டது. டெங்கு, தொழுநோய், குழந்தை திருமணம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

மருந்து, மாத்திரை தேவைப்படுபவர்களுக்கு அருகிலேயே மாத்திரை பெற்று கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதல்-அமைச்சர் மருத்துவக்காப்பீட்டு திட்ட அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு புதிய அட்டைக்காக பதிவு செய்யப்பட்டது.

ஊட்டச்சத்து பெட்டகம்

தொடர்ந்து பூண்டி. கலைவாணன் எம்.எல்.ஏ. பள்ளி குழந்தைகளுக்கான கண் கண்ணாடியையும், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார். முகாமில் 2 ஆயிரத்து 417 புறநோயாளிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 102 பேர் மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

இதில் திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர் புவனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story